இடி விழுந்ததைப்போன்று வான் மோதிச் சென்றது – சாரதி வாக்குமூலம்!
In இலங்கை April 18, 2019 8:30 am GMT 0 Comments 2493 by : Dhackshala
பேருந்தின் மீது நொடிப்பொழுதில் இடி விழுந்ததைப் போன்று வான் மோதிச் சென்றதாக பேருந்தின் சாரதி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
திருகோணமலையிலிருந்து தியதலாவை நோக்கி பயணித்த தனியார் பேருந்து மற்றும் மட்டக்களப்பு நோக்கி பயணித்த வான் ஒன்றும் மஹியங்கனை தேசிய பாடசாலைக்கு முன்னால் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியிருந்தது.
இந்த விபத்தில் வானில் பயணித்த இரட்டை குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழந்திருந்தனர். மேலும் இருவர் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்தோடு பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டு மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தபட்டிருந்தார்.
இந்நிலையில் இந்த விபத்து தொடர்பாக பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கும்போதே பேருந்தின் சாரதி மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்துள்ளார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், “நான் அதிகாலை 1.15 மணியளவில் மஹியங்கனை நகரில் உள்ள உணவகம் ஒன்றில் பேருந்தை நிறுத்தி, அங்கு தேனீர் அருந்திய பின்னர் மீண்டும் பயணத்தை ஆரம்பித்தேன்.
பயணத்தை ஆரம்பித்து ஒரு சில நிமிடங்களில் அதிக வேகத்துடன் பிழையான பகுதியில் வான் ஒன்று வருவதனை அவதானித்தேன்.
இதனையடுத்து முடிந்தளவு பாதையின் ஓரத்திற்கு பேருந்தை நகர்த்தி கொண்டுச் சென்றேன். எனினும் அந்த வான் வேகக் கட்டுப்பாட்டை இழந்து பேருந்தை நோக்கி வந்தது. அதன் பின்னர் நொடிப்பொழுதில் இடி விழுந்ததைப்போன்று வான் பேருந்தை மோதிச் சென்றது. நான் எவ்வளவு முயற்சித்தும் அதனை தடுக்க முடியவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.