ஜெனீவாவில் இந்தியாவின் ஆதரவைப் பெறுவதற்காகவே வடக்கின் 3 தீவுகள் சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளன – சி.வி.
In ஆசிரியர் தெரிவு February 14, 2021 8:38 am GMT 0 Comments 1465 by : Dhackshala
ஜெனீவாவில் இந்தியாவின் ஆதரவை இலங்கை அரசு பெறுவதற்காகவே வடக்கின் மூன்று தீவுகள் சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
வடக்கு மாகாணத்தில் மூன்று தீவுகள் சீன நிறுவனம் ஒன்றுக்கு மின்சக்தி உற்பத்திக்கு வழங்கப்பட்டுள்ளமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “அண்மையில் ஒரேநாளில் இரு வேறு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. ஒரே நாளில் அரசானது இரண்டு வேறுபட்ட தீர்மானங்களை எடுத்து ள்ளது கிழக்கு முனையத்தினை இந்தியாவிற்கு கொடுக்க முடியாது என அறிவித்துள்ளது
அதேபோல வடக்கு மாகாணத்தில் உள்ள மூன்று தீவுகளில் நெடுந்தீவு, அனலைதீவு, நயினாதீவு ஆகிய மூன்றையும் சீன கம்பனிக்கு மின்சக்தி தயாரிப்பதற்காக கொடுப்பதாகச் சொல்லி இருக்கின்றார்கள். இது மிகவும் பாரதூரமான விடயமாகும்.
முதலாவது இந்தியாவுக்கு கிழக்கு முனையத்தினை கொடுக்காமை சம்பந்தமாக இந்தியா பார்த்துக்கொள்ளும்.
ஆனால் வடக்கு மாகாணத்தில் உள்ள மூன்று தீவுகளை கொடுப்பது என்பது எமது வடமாகாண பாதுகாப்பிற்கு மிகவும் பாரதூரமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது எனதுகருத்து.
தற்போதைய அரசானது இந்தியாவிற்கு எதிராக செயற்பட்டு இந்தியாவை கோபப்படுத்துவதற்காக செயற்படுகின்றார்கள்.
13 வது திருத்தச் சட்டத்தின்படி எமது பகுதி காணிகளை ஜனாதிபதி வழங்குவதாக இருந்தால்கூட அது மாகாண சபையின் ஊடாக செய்யப்பட வேண்டும் என்று இருக்கின்றது.
எனினும் மாகாண சபையுடன் எந்தவித ஆலோசனையும் நடத்தாமல் அதற்கு பதிலாக ஆளுநரின் ஊடாக அதற்குரிய அனுமதியைப் பெற்று செய்வது மிகவும் சட்டத்திற்கு முரணானது.
எமது தமிழ் பிரதிநிதிகளும் இது தொடர்பில் தமது தீர்மானத்தை தெரிவிக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது. எதிர்காலத்தில் எமது சந்ததியினருக்கு இதனால் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய நிலை காணப்படுகின்றது.
இந்தியாவில் இருந்து 49 கிலோ மீற்றர் தூரத்திலே உள்ள தீவுகளை இவ்வாறு வேறு ஒரு நாட்டுக்கு கொடுப்பது என்பது பாரதூரமான விடயமாகும். அதேபோல் இலங்கை அரசானது இதனை தெரியாமல் செய்யவில்லை தெரிந்துகொண்டுதான் செய்கின்றது.
அதாவது ஜெனீவாவில் இந்தியாவினுடைய ஆதரவை தாங்கள் பெறுவதற்காக இவற்றை நிறுத்துவதாக இருந்தால் நீங்கள் எங்களுக்கு ஜெனீவாவில் நன்மைகள் பெற்று தரவேண்டும் என்ற அடிப்படையிலும் இவற்றை செய்கின்றார்கள் என்பது எமக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது” என அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.