இந்தியாவிலேயே முதன்முறையாக மனநோயாளிகள் வாக்களிப்பு!

மனநலம் பாதிக்கப்பட்டவர்களை வாக்களிக்க வைத்து இந்தியாவிலேயே முதன்முறையாக சாதனை படைத்துள்ளது கீழ்ப்பாக்கம் அரசு மனநலக் காப்பகம்.
குறித்த காப்பகத்தில் உள்ள 900 பேரில் இருந்து சுயமாக வாக்களிக்கக் கூடிய 159 பேர் வாக்களித்துள்ளனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகள், 19 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்று வருகிறது. இதில் மக்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர்.
கீழ்ப்பாக்கம் அரசு காப்பகத்தில் ஏறக்குறைய 900 பேர் உளநோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் சுயமாக வாக்களிக்கத் தகுதியுடைய 159 பேரைத் தேர்ந்தெடுத்து, அவர்கள் வாக்களிப்பதற்கான வாய்ப்பை சென்னை மாநகராட்சி அதிகாரிகளும், மனநலக் காப்பகப் பேராசிரியர்களும் உருவாக்கிக் கொடுத்தனர். இதற்காக மனநலக் காப்பகத்துக்குள்ளேயே சிறப்பு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
900 பேரில் இருந்து, பல்வேறு சோதனைகளுக்குப் பிறகு 159 வாக்காளர்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர் மனநலக் காப்பக பேராசிரியர்கள். மனநலக் காப்பகம் அமைந்துள்ள பகுதி மத்திய சென்னை தொகுதிக்குள் வருவதால், அந்தத் தொகுதியின் வேட்பாளர்கள் யார், அவர்கள் சார்ந்துள்ள கட்சி, அவர்களின் சின்னம் ஆகியவை குறித்து இரண்டு நாட்களாகப் பயிற்சி அளித்தனர். அதன்படி தற்போது வரை 140 மாற்றுத்திறனாளிகள் வாக்களித்துள்ளனர்.
மாற்றுத்திறனாளிகள் என்று சொல்லியே அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுவதால், அவர்களுக்கான உரிமையைத் தரும் பொருட்டு இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த தேர்தல்களில் கண் பார்வையற்ற, செவித்திறன் குறைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது.
தற்போது சுயமாகச் சிந்திக்கக்கூடிய மனநோயாளிகளுக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளமை ஜனநாயகத்தின் முக்கிய விடயமாகப் பார்க்கப்படுகிறது. இந்தியாவிலேயே இப்படி மனநோயாளிகள் வாக்களிப்பது இதுதான் முதல் முறை. இதில் கிடைக்கும் வெற்றியைப் பொறுத்து அடுத்து தேர்தல் நடைபெறக்கூடிய மாநிலங்களிலும் இந்த முறை அமுல்படுத்தப்படவுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.