இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து செலுத்தும் பணி விரைவாக ஆரம்பிக்கப்படும்- மோடி
In இந்தியா December 4, 2020 11:29 am GMT 0 Comments 1613 by : Yuganthini

விஞ்ஞானிகள் ஒப்புதல் அளித்தவுடன் இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து செலுத்தும் பணி விரைவாக ஆரம்பிக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவை கட்சி தலைவர்கள் பங்கேற்கும் அனைத்துக் கட்சிகள் கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் நிலவரம், கொரோனா தடுப்பூசி விவகாரம், வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
குறித்த காணொளி ஆலோசனையில் மக்களவை, மாநிலங்களவை தலைவர்கள், மத்திய உட்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதன்போது குறித்த கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, “இந்தியாவில் மொத்தம் 8 தடுப்பூசிகள் இறுதிக்கட்ட சோதனையில் உள்ளது. இன்னும் சில வாரங்களில் தயாராகிவிடும்.
மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசியை முதலில் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு முன்கள பணியாளர்கள், முதியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை வழங்கப்படும்.
தடுப்பு மருந்து விலை குறைவாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும். விஞ்ஞானிகள் ஒப்புதல் அளித்தவுடன் இந்தியாவில் தடுப்பு மருந்து செலுத்தும் பணி விரைவாக தொடங்கும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.