இந்தியாவை வைத்து காய் நகர்த்தும் இலங்கை!! – ஐ.நா. ஆணையாளரின் அறிக்கை செயல்வடிவம் பெறுமா??
January 31, 2021 1:32 pm GMT

கடந்த 27ஆம் திகதி வெளியிடப்பட்ட ஐ.நா. மனித உரிமைகள் ஆணையருடைய அறிக்கையானது இதற்கு முன்வந்த அறிக்கைகளிலிருந்து துலக்கமான விதங்களில் வேறுபடுகிறது.
எப்படியென்றால் முதலாவதாக, அது நிலைமாறுகால நீதிப் பயில்வில் ஏற்பட்ட பின்னடைவுகளை ஏற்றுக்கொள்கிறது. இரண்டாவதாக, மனித உரிமை மீறல்களில் சம்பந்தப்பட்டதாகக் குற்றம் சாட்டப்படும் படை அதிகாரிகளுக்கு எதிரான பயணத்தடை, சொத்து முடக்கம் போன்ற தண்டனைகளை அது பரிந்துரைக்கிறது. மூன்றாவதாக, போர்க் குற்றங்கள் தொடர்பாக அல்லது மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு விவகாரத்தை எடுத்துச் செல்லலாம் என்ற பரிந்துரையும் அதில் ஒன்று. நாலாவதாக, அது உறுப்பு நாடுகளை நோக்கி அந்த வேண்டுகோளை முன்வைக்கிறது, உறுப்பு நாடுகள் ஓர் உறுதியான, கடினமான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று என்பதே அதன் நோக்கமாகும்.
அந்த அறிக்கைக்கு மேற்கு நாடுகள் தரப்பிலிருந்து பலமான ஒப்புதலும் ஆதரவும் கிடைத்திருக்கிறது. அனைத்துலக ஜூரிகள் சபை அந்த அறிக்கைக்கு ஆதரவைக் காட்டியிருக்கிறது. அனைத்துலக மன்னிப்புச் சபையும் ஆதரவு தெரிவித்திருக்கிறது. மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஆதரவு தெரிவித்திருக்கிறது. இவ்வாறாக மேற்கு நாடுகளை மையமாகக் கொண்டியங்கும் நீதி மற்றும் மனித உரிமை தொடர்பான அமைப்புகள் மேற்படி ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கைக்கு ஆதரவையும் ஒப்புதலையும் வழங்கியிருக்கின்றன.
அதுபோலவே, மேற்கத்தேய இராஜதந்திர வட்டாரங்களில் அந்த அறிக்கைக்கு ஆதரவு காணப்படுகிறது. அமெரிக்காவும் பிரித்தானியாவும் அந்த அறிக்கையை கவனமாகப் பரிசீலிப்பதாக அறிவித்துள்ளன. கடந்த நான்கு நாட்களில் இவ்வாறு மேற்கிலிருந்து வெளிவந்த அறிக்கைகள் எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் மனித உரிமைகள் ஆணையரின் அறிக்கைக்கு மேற்கில் பலமான ஆதரவுப் பின்னணி காணப்படுகிறது. ஆயின், அந்த அறிக்கையின் தொடர்ச்சியாகவே மார்ச் மாதம் ஐ.நா. தீர்மானம் வெளிவருமா?
கடந்த பத்தாண்டு கால அனுபவத்தைத் தொகுத்தால் அப்படி இல்லை என்ற முடிவுக்கே வர வேண்டியிருக்கும். ஏனெனில், இதற்கு முன்னரும் மனித உரிமைகள் ஆணையர்களுடைய அறிக்கைகள் காட்டமாகவும் இலங்கை அரசாங்கத்தை நோக்கி குற்றஞ் சாட்டும் வகையிலுமே காணப்பட்டன. அந்த அறிக்கைகள் பெரும்பாலும் இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான ஆவணங்களின் தொகுப்பாகக் காணப்பட்டன.
ஆனால், அந்த அறிக்கைகளின் பின்பு வந்த அனைத்து ஐ.நா. தீர்மானங்களும் அதிகம் மென்மையானவகைகளாக அரசாங்கத்தை செல்லமாகக் குட்டி செல்லமாக காதைத் திருகும் தீர்மானங்களாகவே காணப்பட்டன.
2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையிலும் வந்த மூன்று தீர்மானங்களும் அப்படிப்பட்டவைதான். அவை, இலங்கை அரசாங்கத்துக்கு அச்சுறுத்தலானவை அல்ல. இலங்கை அரசாங்கத்தோடு எப்படியெல்லாம் ஒருங்கிணைந்து செய்யலாம் என்று சிந்தித்து உருவாக்கப்பட்டவை.
அவ்வாறான தீர்மானங்களால் பயன் ஏதும் கிடைக்காத ஒரு பின்னணியில் 2015இல் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. தொடர்ந்து அதே ஆண்டு செப்டம்பர் மாதம் இலங்கை அரசாங்கமே ஒரு தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கியது. அதுதான் 30/1 தீர்மானம். நிலைமாறுகால நீதியை இலங்கைத் தீவில் ஸ்தாபிப்பற்கான தீர்மானம் அது. அதாவது, ஆட்சி மாற்றத்தின் மூலம் தமக்கு வாய்ப்பான ஓர் அரசாங்கத்தை உருவாக்கிய மேற்கு நாடுகள் அதன் மூலம்தான் இலங்கைத் தீவில் தாம் தலையிடுவதற்குரிய அதிகரித்த வாய்ப்புக்களை ஏற்படுத்தும் ஒரு தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவர முடிந்தது.
அங்கேயும் கூட நிலைமாறுகால நீதிக்கான தீர்மானம் தொடர்பாக தமிழ் மக்கள் மத்தியில் பலமான எதிர்ப்புக் காட்டப்பட்டது. சந்தேகங்களும் அச்சங்களும் எழுப்பப்பட்டன. எனினும், கடந்த ஆறு ஆண்டுகால அனுபவமானது தமிழ் மக்களின் அச்சங்களும் சந்தேகங்களும் கேள்விகளும் நியாயமானவை என்பதை நிரூபித்திருக்கின்றன. இப்பொழுது கூட்டமைப்பும் அதை ஏற்றுக் கொள்கிறது.
கூட்டமைப்பு, நிலைமாறுகால நீதியை பொறுத்தவரை அதன் பங்காளி. ஆட்சி மாற்றத்தின் பங்காளி. அதன்பின்னர், ஜெனிவா தீர்மானங்களின் பங்காளி. எனவே, நிலைமாறுகால நீதிக்கு கூட்டமைப்பும் ஒருவிதத்தில் பொறுப்பு. ஆனால், சுமந்திரன் இப்பொழுது கூறுகிறார் ஒரு பரிசோதனை செய்தோம் அது தோற்றுவிட்டது என்று.
இவ்வாறானதொரு பின்னணியில்தான் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் அறிக்கை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவத்தின் தொகுப்பாக, குறிப்பாக ஆறாண்டுகால நிலைமாறுகால நீதிப் பயில்வின் தோல்விகளின் விளைவாக இலங்கை அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் ஓர் ஆவணமாக வந்திருக்கிறது.
அது ஏனைய ஆவணங்களில் இருந்து துலக்கமாக வேறுபடும் இடம் எதுவென்றால் இம்முறை மனித உரிமைகள் மீறல்களுக்கு எதிரான தண்டனைகள் குறித்தும் தண்டனைக்குரிய அனைத்துலக நீதிப் பொறிமுறைகள் குறித்தும் பரிந்துரைக்கப்படுகிறது என்பதே.
சரி! அப்படியென்றால் நிலைமாறுகால நீதியின் தோல்வியின் பின்னணியில், இலங்கை அரசாங்கம் நிலைமாறுகால நீதியை ஐ.நா. ஏற்றுக்கொண்ட வடிவத்தில் முன்னெடுக்கத் தயாராக இல்லாத ஒரு பின்னணியில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை என்ன செய்யப்போகிறது?
மனித உரிமைகள் ஆணையரின் அறிக்கையின் பிரகாரம் விவகாரத்தை தண்டனை வழங்கும் பொறி முறைகளுக்குப் பாரப்படுத்தப் போகிறதா? அல்லது அரசாங்கத்தை வழிக்குக் கொண்டு வருவதற்கான அழுத்தத்தைப் பிரயோகிக்கும் ஓர் உத்தியாக இந்த அறிக்கை கடுமையானதாகத் தயாரிக்கப்பட்டிருக்கிறதா?
அறிக்கைக்கும் ஐ.நா.தீர்மானத்துக்கும் இடைப்பட்ட காலப்பகுதிக்குள் அரசாங்கம் எப்படியெல்லாம் இந்தியாவோடும் இணைக் குழு நாடுகளோடும் சுதாகரிக்கப் போகிறது என்பதில்தான் தீர்மானத்தின் இறுதி வடிவம் தங்கியிருக்கிறது.
இந்தியாவிலிருந்து வந்த தடுப்பு மருந்தை ஜனாதிபதி ராஜபக்ஷவே விமான நிலையத்துக்கு நேரில் சென்று பெற்றுக்கொண்டமை என்பது அப்படி ஒரு சுதாகரிப்புத்தான். இப்படித்தான் கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனைய நிர்மாணப் பணிகளை எதிர்ப்புகளின் மத்தியிலும் இந்திய நிறுவனத்திடம் வழங்கத் தயாராகக் காணப்படுவதும் அப்படி ஒரு சுதாகரிப்புத்தான்.
அதனால்தான், ஜெனிவா கூட்டத் தொடரையொட்டி அரசாங்கம் இந்தியாவை மகிழ்விக்கும் வேலைகளில் இறங்கியிருக்கிறது. இந்தியாவை சாந்தப்படுத்தினால் மேற்கை சாந்தப்படுத்தலாம் என்று அரசாங்கம் சரியாகக் கணித்து வைத்திருக்கிறது. இந்தியாவும் அமெரிக்காவும் பூகோளப் பங்காளிகள். எனவே, இந்தியாவை சாந்தப்படுத்தினால் அமெரிக்காவையும் சாந்தப்படுத்தலாம் அதன்மூலம் ஐ.நா. தீர்மானத்தின் மீது செல்வாக்குச் செலுத்தலாம் என்று அரசாங்கம் திட்டமிடுகிறது.
தவிர, இம்முறை சீனாவும் மனித உரிமைகள் பேரவையில் உறுப்பினராக இருக்கிறது. ஏற்கனவே கடந்த ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்த சீனத் தூதுக்குழு ஜெனிவாவை எதிர்கொள்ளும் விடயத்தில் இலங்கை அரசாங்கத்தின் பக்கம் சீனா நிற்கும் என்று வெளிப்படையாகத் தெரிவித்திருந்தது.
எனவே, இது விடயத்தில் சீனாவின் செல்வாக்கு எந்த விதமான விளைவை ஏற்படுத்தும் என்பதையும் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். குறிப்பாக கொவிட்-19 இற்குப் பின்னரான துருவ மயப்பட்ட உலகச் சூழலில் சீனா ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கத்தின் பக்கம் வெளிப்படையாக நிற்பது என்பது அதன் தர்க்கபூர்வ விளைவாக சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பெருந்தொற்று நோய்க்குப் பின்னரான கெடுபிடிப் போர்க் களத்திற்குள் இலங்கைத் தீவை அதிகரித்த அளவில் இழுத்து விடக்கூடியது.
இப்படிப்பார்த்தால், இம்முறை மனித உரிமைகள் கூட்டத்தொடர் என்பது சீனாவுக்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையிலான கெடுபிடிப் போரை பிரதிபலிக்கக் கூடுமா? சீனாவையும் தன்வசம் வைத்துக் கொண்டு இந்தியாவையும் சமாளிக்க முடியும் என்றால் இலங்கை அரசாங்கம் குறிப்பிடத்தக்க அளவிற்கு ஜெனிவாவைக் கையாள முடியும் என்றே கருத வேண்டியுள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில்தான் தாயகத்தில் தமிழ் மக்கள் மத்தியில் இருந்து ஜெனிவாவை நோக்கி ஒரு கூட்டுக் கோரிக்கை முன் வைக்கப்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்கள் தரப்பிலிருந்து சிவில் சமூகங்களும் மக்கள் பிரதிநிதிகளும் இணைந்து அனுப்பியிருக்கும் மேற்படி கூட்டுக் கோரிக்கைக்கு ஐ.நா.வில் ஒரு கவனிப்பு இருக்கும். ஒரு அங்கீகாரம் இருக்கும்.
இப்படி ஒரு ஒருமித்த கோரிக்கை கடந்த பத்தாண்டுகளில் முன்வைக்கப்படவில்லை. எனினும், பாதிக்கப்பட்ட மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் ஒரு அரங்காக ஐ.நா. வெற்றிபெறவில்லை என்பதைத்தான் கடந்த சுமார் மூன்று தசாப்தங்களுக்கு மேலான கிழக்கு ஐரோப்பிய, ஆபிரிக்க, இலங்கை அனுபவங்கள் நிரூபித்திருக்கின்றன.
இதை முன்னிருந்த ஐ.நா. பொதுச்செயலர்களும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். கடந்த மாதம் வெளிவந்த முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் நூலிலும் அவர் பழியை ஐ.நா.வின் மீதே உருட்டி விடுகிறார்.
இப்படிப்பட்ட ஒரு பின்னணியில்தான் மனித உரிமைகள் ஆணையர் உறுப்பு நாடுகளை நோக்கி கடுமையான பரிந்துரைகளை முன்வைத்திருக்கிறார். ஆனால், அவருடைய அறிக்கைக்கும் ஐ.நா. தீர்மானத்துக்கும் இடையே இடைவெளி இருக்கும் என்பதைத்தான் கடந்த காலம் நிரூபித்திருக்கிறது. தமிழ் மக்கள் கடுமையாக உழைக்க வேண்டியதும் அந்த இடைவெளிக்குள்தான்.
-
ஜெனீவாவில் இந்தியாவின் நிலைப்பாடு எப்படி அமையும்?
கடந்த ஓராண்டு கால நடைமுறைகளைத் தொகுத்துப் பார்த்தா...
-
தமிழர் மத்தியில் பெருந் தலைவர்கள் கிடையாது: இருப்பவர்கள் எல்லாருமே கட்சி நிர்மாணிகள்தான்!!
தமிழ் அரசியல் வரலாற்றில் மிக நீண்ட நாள் பேரணி ஒன்ற...