இந்திய பிரிமியர் லீக் : ஐதராபாத் அணியிடம் படுதோல்வியடைந்தது சென்னை அணி!
In விளையாட்டு April 18, 2019 6:43 am GMT 0 Comments 1480 by : adminsrilanka

12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு ஐதராபாத்தில் இடம்பெற்ற 33-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் ஐதராபாத் சன்ரைசஸ் அணியை எதிர்கொண்டது.
சென்னை அணியில் டோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு சுரேஷ் ரெய்னா அணித்தலைவராக செயற்பட்டு வந்தார். டோனிக்கு பதிலாக விக்கெட் காப்பாளர் சாம் பில்லிங்ஸ் இடம் பிடித்தார்.
இதே போன்று மிட்செல் சான்ட்னெர் நீக்கப்பட்டு கரண் ஷர்மா அணியில் சேர்க்கப்பட்டார். ஐதராபாத் அணியில் ரிக்கி புய், அபிஷேக் ஷர்மா நீக்கப்பட்டு யூசுப் பதான், ஷபாஸ் நதீம் அணிக்கு திரும்பினர்.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை அணித் தலைவர் ரெய்னா முதலில் துடுப்பாட்டத்தை தேர்ந்தெடுத்தார். இந்த சீசனில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பாட்டத்திற்கு ஒரு அணி முன்னுரிமை கொடுப்பது இது 4-வது முறையாகும்.
இதன்படி ஷேன் வாட்சனும், பாப் டு பிளிஸ்சிஸ்சும் சென்னை அணியின் இன்னிங்சை ஆரம்பித்தனர். இதன்படி வலுவான அடித்தளம் ஒன்றை அமைத்து தந்த அவர்கள் முதல் விக்கெட்டுக்கு 9.5 ஓவர்கள் நிறைவில் 79 ஓட்டங்களை திரட்டினர். இதில் பிளிஸ்சிஸ் அடித்த ஒரு சிக்சர் தொடரின் 400-வது சிக்சராக பதிவானது. வாட்சன் 31 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
சென்னை அணி எவ்வாறாயினும் 160 ஓட்டங்களை தாண்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தொடக்க ஜோடி பிரிந்ததும் ஆட்டத்தின் போக்கு திசைமாறியது. பிளிஸ்சிஸ் 45 ஓட்டங்களில் 3 பவுண்டரி, 3 சிக்சர்களை பெற்றுக் கொடுத்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் கொடுத்த அழுத்தம் காரணமாக சென்னை அணி தடம் புரண்டது.
அவர், பொறுப்பு அணித்தலைவர சுரேஷ் ரெய்னாவை 13 ஓட்டங்களுடனும், கேதர் ஜாதவ்வை 1 ஓட்டத்துடனும் ஒரே ஓவரில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழக்கச் செய்தார்.
இதனால் ஓட்ட வேகம் ஒரேயடியாக மந்தமானது. அடுத்து வந்த சாம் பில்லிங்சும் தாக்குப்பிடிக்கவில்லை. கடைசி 6 ஓவர்களில் பந்து இரண்டு முறை மட்டுமே எல்லைக்கோடு பக்கம் சென்றது.
20 ஓவர்கள் முழுமையாக விளையாடிய சென்னை அணி 5 விக்கெட் இழப்புக்கு 132 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது. அம்பத்தி ராயுடு 25 ஓட்டங்களுடனும், ரவீந்திர ஜடேஜா 10 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஐதராபாத் தரப்பில் ரஷித்கான் 2 விக்கெட்டும், நதீம், விஜய் சங்கர், கலீல் அகமது தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
தொடர்ந்து களமிறங்கிய ஐதராபாத் அணியில் டேவிட் வார்னர் சிறப்பாக விளையாடினார். 24 பந்துகளில் தனது 41-வது அரைசதத்தை எட்டிய அவர் 50 ஓட்டங்களில் 10 நான்கு ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த அணித் தலைவர் வில்லியம்சன் 3 ஓட்டங்களுடனும், விஜய் சங்கர் 7 ஓட்டங்களுடனும், தீபக் ஹூடா 13 ஓட்டங்களுடனும் அடுத்தடுத்து வெளியேறினாலும் அதனால் அந்த அணிக்கு எந்த பாதிப்பும் இல்லை.
ஐதராபாத் அணி 16.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 137 ஓட்டங்களை குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பேர்ஸ்டோ 44 பந்துகளை எதிர்கொண்டு 3 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் அடங்களாக 61 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார். 9-வது ஆட்டத்தில் விளையாடிய சென்னை அணிக்கு இது 2-வது தோல்வியாகும். ஐதராபாத் அணிக்கு 4-வது வெற்றியாகும்
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.