இனங்களிடையே சகவாழ்வைப் பலப்படுத்துவதில் தங்கியுள்ள இலங்கையின் எதிர்காலம்
In சிறப்புக் கட்டுரைகள் April 23, 2018 11:15 am GMT 0 Comments 4460 by : Arun Arokianathan
இலங்கையில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும், சகவாழ்வையும் கட்டியெழுப்பும் பொருட்டும் இன, மத ஒருமைப்பாட்டை மேலோங்கச் செய்யும் வகையிலுமான செயற்திட்டத்தை முன்னெடுப்பதற்காக பாராளுமன்றக் குழுவொன்றை சபாநாயகர் கரு ஜயசூரிய ஏற்படுத்தியுள்ளார். அனைத்து மதத் தலைவர்களதும் வழிகாட்டலில் இத்திட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. காலம் தாழ்த்தியாவது இவ்வாறானதொரு செயற்பாடு முன்னெடுக்கப்பட்டிருபப்து வரவேற்கத்தக்கதாகும்.
பல்லின மக்கள் வாழும் நாட்டில் இன முறுகல்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாததுதான். ஆனால் இனங்களுக்கிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்தி இன, மத, மொழி பேதம் கடந்து ஒற்றுமையை உறுதிப்படுத்துவதன் மூலம் சகவாழ்வைப் பலப்படுத்த முடியும்.
கடந்த காலங்களில் இடம்பெற்ற இனங்களுக்குடையில் ஏற்பட்ட பகைமை உணர்வுகளுக்கு புரிந்துணர்வின்மையே பிரதான காரணமாகும். தவறான பிரசாரங்களாலும், பொறாமை காரணமாகவும் இனக்குழுக்களுக்கிடையே முரண்பாடுகள் தோற்றுவிக்கப்பட்டன. சில சந்தர்ப்பங்களில் அரசியல் முரண்பாடுகளும் இதற்குக் காரணமாக அமைந்தன. பெரும்பான்மைச் சமூகத்தின் மத்தியில் சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான காழ்ப்புணர்வுகளை தோற்றுவித்து பகைமை உணர்வுகளை விதைத்ததன் காரணமாக நாடு சந்தித்த அவலங்களை வாய்விட்டுச் சொல்ல முடியாதுள்ளது. ஆன்மீகப் பண்பாடுகள் பேணப்படாததும் இதற்கு மற்றொரு காரணமாகும். காலாதிகாலமாக ஒற்றுமையுடன் வாழ்ந்த சமூகங்கள் இன்று சின்னாபின்னப்பட்டுப் போயுள்ளன.
நல்லிணக்கம், சமாதான சகவாழ்வு என்பன இனவாதத்தீயினால் பொசுக்கப்பட்டு மனித மனங்களில் தீய விஷத்தை விதைத்ததால் நாடு எதிர்கொண்ட அழிவுகள், சவால்கள் எண்ணிக்கையிலடங்காதவையாகும். எங்கள் விரல்களைக் கொண்டே எமது கண்களைக் குத்திக்கொண்டுள்ளோம். அப்பாவி மக்கள் மத்தியில் பரப்பப்பட்ட வன்முறைக் கலாசாரம் எமது நாட்டை பேரழிவுக்கே இட்டுச் சென்றது. நாட்டின் பொருளாதாரத்தை மிக மோசமாக பாதிக்கும் வகையில் இனவாதத் தீ பரவியது. இதில் வெற்றி தோல்வி என்பதற்குப் பதிலாக நாடு வீழ்ச்சி கண்டது மட்டுமே மீதமாகியுள்ளது.
இனம், மதம், மொழி வேறுபாடுகளுக்கப்பால் நாம் அனைவரும் இலங்கை மாதாவின் புதல்வர்கள் ஒரே குடும்பத்தின் அங்கத்தவர்கள் என்ற மனநிலை உருவாக்கம் பெற்றால் மட்டுமே தேசத்தின் மாண்பைப் பாதுகாக்க முடியும். இதன் பொருட்டுத்தான் சபாநாயகர் கரு ஜயசூரிய சகல மதத் தலைவர்களையும், கட்சித் தலைவர்கள், அனைத்து இனக் குழுக்களின் பிரதிநிதிகளையும் ஒன்றாக அணிதிரட்டி ஒரே குழுவாக அமைத்துள்ளார். அனைத்து உள்ளங்களிலும் நல்லெண்ணத்தை விதைப்பதன் மூலமே இன ஐக்கியத்தை உறுதிப்படுத்தக் கூடியதாக இருக்கும் என்பதை சபாநாயகர் இங்கு வலியுறுத்தியிருப்பது கவனத்தில் கொள்ளத்தக்கதாகும். சகோதர வாஞ்சை சகலரிடத்திலும் ஏற்பட வேண்டும், நல்லெண்ணமும், நல்லிணக்கமும் தழைத்தோங்கும் போதுதான் நாட்டில் அமைதி, சமாதானம் வலுப்பெற முடியும்.
கடந்தகால பகைமை உணர்வுகள் காரணமாக நாட்டில் பாரிய பாதிப்புக்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. எதிர்காலத்தில் இவ்வாறான நிலை ஏற்பட இடமளிக்கப்படாத வகையில் சகவாழ்வை உத்தரவாதப்படுத்தக்கூடிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது. சகவாழ்வை கட்டியெழுப்ப முடிந்தால் மாத்திரமே பரஸ்பர நல்லுறவை கட்டிக்காக்க முடியும் என்பதை மதத் தலைவர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள்.
அதேசமயம் மொழி ரீதியிலும் நாம் பிளவுபட்டுக் கொண்டிருக்க முடியாது. நாடு முழுவதும் கிராமிய மட்டத்திலிருந்து மும்மொழிப் பயன்பாடு உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும். சகல பாடசாலைகளிலும் மும்மொழிப் பயிற்சிக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். முடிந்தால் சகல பாடசாலைகளும் மும்மொழிப் பாடசாலைகளாக மாற்றப்பட வேண்டும். மூன்று மொழிகளையும் சகலரும் கற்றுத் தேற முடிந்தால் சந்தேகங்கள், பொறாமைக்குணங்களிலிருந்து எம்மால் விடுபட முடியும்.
இந்த நிகழ்வில் கருத்துத் தெரிவித்த தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் சகல இன, மத, மாணவர்களும் ஒரே கூரையின் கீழ் கல்வி கற்கும் மகிழ்ச்சிகரமான நாளை தான் எதிர்பார்த்திருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார். உண்மையிலேயே அவ்வாறானதொரு நாளை எம்மால் கண்டுகொள்ள முடிந்தால் அது இந்த நாடுபெற்ற பெரும்பேறாகவே நோக்கக்கூடியதாக இருக்கும். தமது எண்ணத்தை அமைச்சரவையில் சமர்ப்பிக்க எண்ணியிருப்பதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்திருக்கிறார். அந்த நல்லெண்ணம் கைகூட வேண்டுமென பிரார்த்திப்போம்.
ஒழுக்கமுள்ள நாட்டைக் கட்டியெழுப்ப சகல இன மக்களிடமும் நல்லெண்ணம் உருவாக வேண்டும். அத்துடன் புரிந்துணர்வு மிக முக்கியம். இலங்கை மக்கள் ஆன்மீகப் பண்பில் வளர்ந்தவர்கள். ஒழுக்கம், கலாசாரம் போன்றவற்றை சிறுவயது முதலே பேணி வருபவர்கள், ஆனால் மேற்குலக கலாசாரம் எமது மக்களிடம் கொடிய விஷமாக புகுந்துகொண்டுள்ளது. அதன் விளைவாக நாடு பெரும் கலாசார சீரழிவை நோக்கிச் செல்லத் தொடங்கியது. இதுவே நாடு சகல நிலைகளிலும் பின்னடைவைச் சந்தித்தது. எமது இளம் சந்ததியினருக்கு மீண்டு எமது கலாசார பாரம்பரியங்களைப் போதிக்க வேண்டிய கட்டாயம் இன்று ஏற்பட்டுள்ளது.
இந்த நல்லிணக்க, சக வாழ்வுக் குழு வெறுமனே மேலோட்டமாமகச் செயற்படுமானால் உரிய பயனை அடைய முடியாது போகும். அடிப்படையிலிருந்தே பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எமது பாரம்பரிய கலாசார பண்பாடுகள் இவர்களுக்கு ஊட்டப்பட வேண்டும். ஆன்மீக விழுமியங்கள் மீதான பற்றுதலுக்கு தூண்டப்பட வேண்டும். பாராளுமன்றத்தில மட்டுமல்ல கிராமிய மட்டத்திலிருந்தே பணிகள் தொடங்கப்பட வேண்டும்.
அத்துடன் அரசியல் தலைவர்கள், சிவில் அமைப்புகள் நேர்மையுடனும் ஒழுக்க விழுமியங்களுடன் செயற்பட வேண்டும். போதனைகளால் மட்டும் எமது சந்ததியை திருத்தமுடியாது. செயற்பாடுகள், சாதனைகள் மூலம் மக்களை விழிப்புணர்வூட்ட வேண்டும். அப்படி நடக்குமானால் மட்டுமே மேற்படி குழு அதன் இலக்கை அடைய முடியும் என்பதை சொல்லி வைக்கின்றோம்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.