இனங்களை அடிப்படையாகக் கொண்டு கிழக்கில் கல்வி வலயங்கள்- ஜி.எல்.பீரிஸ்

இனங்களை அடிப்படையாகக் கொண்டு கிழக்கு மாகாணத்தில் கல்வி வலயங்கள் உருவாக்கப்பட்டுள்ளமை தொடர்பாக அறிக்கைகள் கிடைத்துள்ளதாக கல்வியமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அவ்வாறான கருத்திட்டங்களுக்கு அமைய கல்வி வலயங்கள் உருவாக்கப்படுவதற்கு கொள்கை ரீதியாக நாங்கள் இணங்க மாட்டோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஸாரப், வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் கல்வி அமைச்சரிடம், பொத்துவில் உப கல்வி வலயம், கல்வி வலயமாக தரமுயர்த்தப்படுமா என எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் கூறுகையில், “உப கல்வி வலயங்களை உருவாக்குவதற்காக இலங்கை கல்விக் கொள்கையில் எவ்வித அனுமதியும் அளிக்கப்பட்டிருக்கவில்லை. அந்தக் கல்விக் கொள்கைகளை நாம் அனுமதிப்பதில்லை என்பதுடன் அதனை முற்றாக நிராகரிக்கிறோம்.
என்றாலும், கிழக்கு மாகாண சபையால் பொத்துவில் உப கல்வி வலயமொன்று நடத்தப்பட்டுச் செல்வதாக அறிக்கைகள் கிடைக்கப்பெற்றுள்ளன. தேசிய மட்டத்தில் உப கல்வி வலயங்கள் அனுமதிக்கப்படவில்லை என்பதால் குறித்த உப கல்வி வலயத்தில் பணிபுரியும் இரண்டு அதிகாரிகளும் இலங்கை நிர்வாக சேவைக்குள் அனுமதிக்கப்படவில்லை.
அதேபோன்று, உப கல்வி வலயங்கள் அனுமதிக்கப்படவில்லை என்பதால் அவ்வாறான உப கல்வி வலயங்களில் உள்ள அதிகாரிகளுக்கு அதிகாரமும் வழங்கப்படாது.
சிறிய தேவைகளுக்காக பொத்துவில் பகுதியில் உள்ளவர்கள் அக்கரைப்பற்றுக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால், புதிய கல்வி மறுசீரமைப்புக் கொள்கையில் புதிய தொழில்நுட்பங்கள் உள்வாங்கப்பட்டுள்ளன.
கல்வி முகாமைத்தும் மற்றும் நிர்வாக முறைகள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன. தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் புதிய கல்வி முகாமைத்துவம் மற்றும் நிர்வாக முறைகள் உருவாக்கப்படும். விரைவாக இந்த வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
ஆகவே, பொத்துவில் பகுதிக்கு தனியான கல்வி வலயமொன்று உருவாக்கப்படாது. இனங்களை அடிப்படையாகக் கொண்டு கிழக்கு மாகாணத்தில் கல்வி வலயங்கள் உருவாக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அறிக்கைகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவ்வாறான கருத்திட்டங்களுக்கு அமைய கல்வி வலயங்கள் உருவாக்கப்படுவதற்கு கொள்கை ரீதியாக நாங்கள் இணங்க மாட்டோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.