இன மத பேதம் கடந்து வியாஸ்காந்துக்கு இலங்கை மக்கள் வாழ்த்து!

இலங்கையில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்றுவரும் லங்கா பீரியர் லீக் ரி-20 தொடரில், கிரிக்கெட் அறிமுகத்தை பெற்றுக்கொண்ட விஜயகாந் வியாஸ்காந்துக்கு, இன, மத பேதம் கடந்து இலங்கை மக்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அவரது புகைப்படத்தை சமூகவலைதளத்தின் ஊடாக பகிரும் கிரிக்கெட் இரசிகர்கள், அவருக்கு சிறந்த கிரிக்கெட் எதிர்காலம் அமைய வேண்டுமென வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
முன்னாள் வீரர்களான குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன, ரஸ்ஸல் அர்னல்ட் மற்றும் அஞ்சலோ மத்தியூஸ் ஆகியோர் டுவிட்டர் பக்கத்தின் ஊடாக வாழ்த்து தெரிவித்தனர். அத்துடன் இலங்கை அரசியல்வாதிகளும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
அத்துடன் இன்று (சனிக்கிழமை) தனது 19 பிறந்தநாளை கொண்டாடும் வியாஸ்காந்துக்கு சக வீரர்கள், இரசிகர்கள் என பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் முத்தையா முரளிதரனுக்கு பிறகு ஒரு தமிழனாக பேசப்படும் வீரராக மாறியுள்ள வியாஸ்காந், நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற கொழும்பு கிங்ஸ் அணிக்கெதிரான போட்டியில், யாழ்ப்பாண ஸ்டாலியன்ஸ் அணியை பிரதிநிதித்துவப்படுத்தி களமிறங்கினார்.
வியாஸ்காந், தனது துடுப்பாட்டத்திலும் ஆறுதல் அளிக்கும் வகையில் துடுப்பெடுத்தாடினார். 4 பந்துகளை எதிர்கொண்ட அவர் 3 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது இறுதிவரை களத்தில் இருந்தார்.
பின்னர் வலக்கை சுழற்பந்து வீச்சாளராக தன்னை அடையாளப்படுத்தி பந்துவீசிய வியாஸ்காந், முன்னணி வீரர்களான தினேஷ் சந்திமால், அஞ்சலோ மத்தியூஸ் மற்றும் ஆந்ரே ரஸ்ஸல் ஆகியோரை தனது பந்துவீச்சின் மூலம் திக்குமுக்காட வைத்தார்.
நான்கு ஓவர்களை வீசி 29 ஓட்டங்களை விட்டுக்கொடுத்த அவர், முக்கிய வீரரான அஞ்சலோ மத்தியூசை ஆட்டமிழக்க செய்திருந்தார்.
துடுப்பாட்ட ஸ்டைலிலேயே கிரிக்கெட் வர்ணனையாளர்களின் கவனத்தை ஈர்த்திருந்திருந்த வியாஸ்காந், பந்துவீச்சிலும் அசத்தி தனது திறமையை நிரூபித்துள்ளார். இதனால் அவர் நிச்சயம் இலங்கை தேசிய அணிக்கு விளையாட வேண்டுமென இரசிகர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
வியாஸ்காந்துக்கு ஆதவனும் பிறந்தநாள் வாழ்த்தினை தெரிவிப்பதோடு, இலங்கை அணிக்காக அவர் விளையாடுவதையும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது………..
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.