இயல்பு வாழ்க்கையை நோக்கிச் செல்லும் அவுஸ்ரேலியா – சில COVID-19 கட்டுப்பாடுகள் தளர்வு
In அவுஸ்ரேலியா November 22, 2020 4:01 am GMT 0 Comments 1836 by : Jeyachandran Vithushan

அவுஸ்ரேலியாவில் மாகாணங்களுக்கிடையிலான எல்லைகள் திறக்கப்பட்டுள்ளதுடன் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கட்டுப்பாடுகளையும் அரசாங்கம் தளர்த்தியது.
கடந்த ஒரு வார காலமாக எவ்வித சமூக தொற்றோ அல்லது கொரோனா தொற்றினால் எவ்வித உயிரிழப்புக்களோ ஏற்படாத நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் நாட்டின் தொற்றுக்களின் மையமாக மாறிய தென் அவுஸ்ரேலியாவில் புதிய சமூக தொற்று எதுவும் பதிவாகவில்லை என்றும் திட்டமிட்டதை விட கடுமையான முடக்கத்தை நீக்கிய விரைவான நடவடிக்கை பேரழிவைத் தவிர்த்தது என்று மாநில முதல்வர் கூறினார்.
பிரித்தானியாவில் இருந்து நாடு திரும்பிய ஒரு பயணி காரணமாக 4,500 பேரை தனிமைப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால், மாநிலத்தில் தற்போது சிகிச்சை உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 37 ஆக காணப்படுகின்றது.
இந்நிலையில் தெளிவான சுகாதார ஆலோசனையைப் பின்பற்றுவதன் மூலம் எங்கள் மாநிலத்தில் ஒரு பேரழிவு சூழ்நிலையைத் தவிர்த்துவிட்டோம் என முதல்வர் ஸ்டீவன் மார்ஷல் தெரிவித்துள்ளார்.
இதேவேளை விக்டோரியா பல மாதங்களாக தொற்றுநோயை எதிர்த்துப் போராடி வருவதுடன் அவுஸ்ரேலியாவின் 907 கொரோனா வைரஸ் தொடர்பான இறப்புகளில் 90% ஆனவை இம்மாநிலத்திலேயே பதிவாகியுள்ளன.
இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் முக்கவசம் அணிய வேண்டும் என்ற விதிகளை தளர்த்தியதுடன் பொதுக் கூட்டங்களுக்கு அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.
சுமார் 6.4 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்த மாநிலத்தில் 23 நாட்களாக புதிய தொற்று நோயாளிகள் எவரும் அடையாளம் காணப்படவில்லை என்பதுடன் இது 111 நாள் முடக்கத்தான் பின்னர் கிடைத்த வெற்றி என்பதும் குறிப்பிடத்தக்கது.
அத்தோடு அவுஸ்ரேலியாவின் 24 மில்லியன் மக்களில் கால் பகுதியைக் கொண்ட மாநிலமான நியூ சவுத் வேல்ஸில் இன்று ஞாயிற்றுக்கிழமை 15 வது நாளாக புதிதாக சமூக தொற்று எதுவும் பதிவாகாத நிலையில் திங்கட்கிழமை முதல் விக்டோரியாவுடனான எல்லையை திறக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அவுஸ்ரேலியாவில் இதுவரை கொரோனா தொற்றினால் 27 ஆயிரத்து 800 பேர் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை 907 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது நாடுமுழுவதும் சிகிச்சையில் 88 பேர் மட்டுமே உள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.