இருதரப்பு உறவை மேம்படுத்த முடிவு: பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் – பிரதமர் இடையில் சந்திப்பு

பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் தாரெக் அரிபுல் இஸ்லாம் மற்றும் துணை உயர் ஸ்தானிகர் மொஹமட் ஹஸ்ரத் அலி பான் ஆகியோர் பிரதமர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளனர்.
இந்தச் சந்திப்பு நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவை மேம்படுத்துவதற்கு அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட எதிர்பார்ப்பதாக பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், 73ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமருக்கு வாழ்த்துத் தெரிவித்த உயர்ஸ்தானிகர், பங்காளதேஷ் பிரதமரின் வாழ்த்துச் செய்தியை உள்ளடக்கிய ஆவணமொன்றையும் பிரதமரிடம் கையளித்தார்.
இதேவேளை, வேளாண்மை, மீன்பிடி மற்றும் கப்பல் துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான மேம்பட்ட ஒத்துழைப்பு மூலம் தற்போதுள்ள இருதரப்பு உறவுகளை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்பு குறித்து உயர்ஸ்தானிகர் மிகுந்த ஆர்வம் காட்டியதுடன், பங்களாதேஷ், நன்னீர் மீன் உற்பத்தியில் நான்காவது இடத்தில் உள்ளதாகவும் அதன் சிறந்த நடைமுறைகளை இலங்கையுடன் பகிர்ந்துக் கொள்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், வெள்ளம் மற்றும் வறட்சி ஆகிய காலநிலைகளுக்கு ஏற்ற வகையிலான உயர்தர அரிசியை உற்பத்தி செய்வதற்கும் அதன்மூலம் அரிசி உற்பத்தியை அதிகரிப்பதற்கும் பங்களாதேஷ் இதுவரை இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கிவருகிறது.
அத்துடன், கல்வி மற்றும் ஒளடத துறைகளுக்கு பங்காளதேஷ் இதுவரை அளித்த ஆதரவுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது நன்றியைத் தெரிவித்ததோடு, இலங்கையில் ஒளடத உற்பத்தித் துறையில் பங்காளதேஷ் முதலீட்டாளர்களை ஊக்குவிக்க உயர்ஸ்தானிகருக்கு அழைப்புவிடுத்தார்.
மேலும், பங்காளதேஷ் இவ்வாண்டு ஐம்பதாவது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகின்ற நிலையில், அதனை முன்னிட்டு தமது நாட்டிற்கு விஜயம் செய்யுமாறு பிரதமருக்கு உயர்ஸ்தானிகர் அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.