வரவு செலவு திட்டம் – சுதந்திரக் கட்சியின் இறுதி முடிவு (2ஆம் இணைப்பு)
In இலங்கை April 5, 2019 8:19 am GMT 0 Comments 2720 by : Dhackshala

2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பை புறக்கணிக்கபோவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.
நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
இறுதி வாக்கெடுப்பையும் புறக்கணிக்கும் சுதந்திரக் கட்சி?
வரவு செலவுத் திட்டத்தின் மீதான இறுதி வாக்கெடுப்பை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வரவு – செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றில் இடம்பெறவுள்ளது.
இந்நிலையில் சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வரவு செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பில் பங்கேற்கமாட்டார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
கடந்த செவ்வாய்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடந்த சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் வரவுசெலவுத் திட்டத்தை ஆதரிப்பதா? எதிர்ப்பதா? என்பது தொடர்பாக இறுதி முடிவு எட்டப்படவில்லை.
ஜனாதிபதி செயலகம் மற்றும் ஜனாதிபதியின் கீழ் உள்ள அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகளையும் உள்ளடக்கியது என்பதால், வரவுசெலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிக்க முடியாது என்று சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தெளிவாக கூறியிருந்தனர்.
இந்த நிலையில், இன்றைய வாக்கெடுப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கமாட்டார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பை சுதந்திரக்கட்சினர் புறக்கணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.