இலங்கைக்கான கண்காணிப்பு விஜயம் திருப்தியளித்தது – ஐ.நா. உபகுழு

இலங்கைக்கு முதன்முறையாக விஜயம் செய்திருந்த சித்திரவதைத் தடுப்பு தொடர்பான ஐக்கிய நாடுகள் உபகுழு அதன் பணிகளுக்கு இலங்கை அரசாங்கத்திடமிருந்து திருப்தியான ஒத்துழைப்பு கிடைத்ததாகத் தெரிவித்துள்ளது.
சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு நிராகரிக்கப்பட்ட மக்கள் இலங்கையில் எவ்வாறு நடத்தப்படுகின்றார்கள் என்பதைக் கண்காணிப்பதற்கான தமது 10 நாள் பணிகளின் போது சகல தடுப்புக்காவல் நிலையங்களுக்கும் சென்று நிலைவரங்களைப் பார்வையிடக் கூடியதாக இருந்ததுடன், பொருத்தமான சகல தகவல்களையும் பெற முடிந்ததுடன், நம்பகரமான நேர்காணலை செய்ய முடிந்ததாகவும் அந்த உபகுழு கூறியுள்ளது.
சித்திரவதைக்கு எதிரான சாசனத்தின் பிரகாரம் தேவைப்படுகின்ற தேசிய தடுப்புப் பொறிமுறை ஒன்றைப் பொறுத்தவரை இலங்கையின் நடவடிக்கைகளை நாம் சாதகமான முறையிலேயே நோக்குகின்றோம் என்று நால்வர் கொண்ட குழுவிற்குத் தலைமை தாங்கிய மோல்டோவா குடியரசைச் சேர்ந்த விக்டர் சஹாரியா குறிப்பிட்டுள்ளார்.
தங்களது பணிகள் நம்பகத் தன்மை, பக்கச் சார்பின்மை, விருப்பத் தெரிவிற்கு அப்பாற்பட்ட தன்மை, முழுமையான உண்மை மற்றும் அக உணர்விற்கு அப்பாற்பட்ட அணுகுமுறை ஆகிய கோட்பாடுகளின் பிரகாரம் முன்னெடுக்கப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. உப குழுவினர் பொலிஸ் நிலையங்கள், சிறைச்சாலைகள், விளக்கமறியல் சிறைச்சாலைகள், இராணுவ முகாம்கள், புனர்வாழ்வு நிலையங்கள், மனநலக் காப்பகங்கள், சிறுவர்களுக்கான புனர்வாழ்வு நிலையங்கள் ஆகியவற்றுக்கு விஜயம் மேற்கொண்டிருந்ததுடன், அரசாங்கப் பிரதிநிதிகள், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் சந்திப்புக்களையும் முன்னெடுத்திருந்தனர்.
அதனடிப்படையில் ஐ.நா. உப குழுவின் அடுத்த பணியாக அதன் அவதானங்கள், விதப்புரைகள் உள்ளடங்கிய நம்பகரமான அறிக்கையொன்றை இலங்கை அரசாங்கத்திற்குச் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.