இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் சுனாமி நினைவேந்தல் நிகழ்வுகள்
In இலங்கை December 26, 2020 10:03 am GMT 0 Comments 1374 by : Yuganthini
சுனாமி ஆழிப்பேரலை இடம்பெற்று இன்றுடன் (சனிக்கிழமை) 16ஆண்டு நிறைவடைவதை நினைவு கூரும் நிகழ்வுகள், இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றுள்ளன.
அந்தவகையில் வவுனியா கந்தசாமி ஆலயத்தில், சுனாமி அனர்த்தத்தில் மரணித்தவர்களை நினைவுகூர்ந்து, அஞ்சலி பூசை வழிபாடுகள் இடம்பெற்றன.
வவுனியா அந்தணர் ஒன்றியம், கந்தசாமி ஆலய நிர்வாகசபை மற்றும் தமிழ் விருட்சம் என்பன இணைந்து ஏற்பாடு செய்த அஞ்சலி நிகழ்வு அந்தணர் ஒன்றியத்தின் செயலாளர் பிரபாகர குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.
இதேபோன்று யாழ்.பல்கலைக்கழகத்திலும் சுனாமியால் உயிரிழந்தோரின் நினைவு நிகழ்வு இடம்பெற்றது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சுனாமியால் உயிரிழந்தோரின் 16 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு, இன்றைய தினம் நினைவு கூரப்பட்டது.
இதேவேளை, திருகோணமலை- கிண்ணியா பிரதேச செயலகத்தினால் 16ஆவது சுனாமி நினைவு தின நிகழ்வு, கிண்ணியா கடற்கரை சிறுவர் பூங்கா சுனாமி நினைவு தூபிக்கு முன்னால் நடைபெற்றது.
இதற்கிடையில் முல்லைத்தீவு, கள்ளப்பாடு பகுதியிலும் சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
இதேபோன்று வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயம் மற்றும் வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் சுனாமி பேரலையில் உயிர் நீத்தவர்களிற்கான 16 ஆம் ஆண்டு அஞ்சலி நிகழ்வு இன்று இடம்பெற்றது.
பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டுகழக மைதானத்தில் அமைந்துள்ள சுனாமி நினைவு தூபியில் குறித்த பிரார்த்தனை நிகழ்வு இடம்பெற்றிருந்தது.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் சுனாமி அனர்த்தம் காரணமாக 2800க்கும் மேற்பட்டவாகள் காவுகொள்ளப்பட்ட நிலையில் இன்று அதன் 14வது ஆண்டு, நினைவுகூரும் நிகழ்வுகள் நடைபெற்றன.
மட்டக்களப்பு- திருச்செந்தூர், புதுமுகத்துவாரம், நாவலடி ஆகிய பகுதிகளில் சுனாமி நினைவேந்தல் நிகழ்கள் நடைபெற்றன.
மேலும், சுனாமி பேரலையின் 16 ஆவது ஆண்டு நினைவு தின துஆ பிராத்தனையும் குராஆன் தமாம் செய்யும் நிகழ்வும் இன்று காலை அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது அல்- அக்பர் ஜூம்மாபள்ளிவாசலில் நடைபெற்றது.
இதன்போது சுனாமியால் உயிர் நீத்த உறவுகளுக்கான துஆ பிரார்த்தனையை சாய்ந்தமருது அல் அக்பர் ஜூம்மா பள்ளிவாசலின் பேஸ் இமாம் அல்-ஹாபிழ் மௌலவி எம்.ஐ.எம். றியாஸ் (அல்தாபி) நிகழ்த்தினார்.
இதேபோன்று அம்பாறை- காரைதீவு கடற்கரையில் சுனாமி நினைவுதூபி அமைந்துள்ள பகுதியில், 16ஆவது சுனாமி நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன. இதில் காரைதீவு பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன், காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி.ஜெயசிறில், காரைதீவு உப.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, மீனவர் சங்கத்தினர், ஆலய தலைவர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதேவேளை கல்முனையிலும் சுனாமி நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன. இவ்வாறு இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் சுனாமி நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.