இலங்கையின் நல்லதோர் எதிர்காலத்தின் ஆரம்ப நாளாக தீபாவளித் திருநாள் அமையட்டும்- மஹிந்த
In இலங்கை November 14, 2020 3:07 am GMT 0 Comments 1600 by : Yuganthini
இலங்கையின் நல்லதோர் எதிர்காலத்தின் ஆரம்ப நாளாக இத்தீபாவளித் திருநாள் அமையட்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இருளை அகற்றி ஒளி ஏற்றும் இந்து மக்களின் உயர்ந்த சமயப் பண்டிகைத் தினமான தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்புவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
இருட்டு வழியிற் தீபம் இருந்தால் அதுவே வழிக்குத் துணையாக அமையும். மனித வாழ்க்கைப் பாதைக்கு அருட்தீபம் துணை நின்றால் வாழ்வு சுபீட்சமாகும்.
அத்தகைய அருட் தீபமாகிய ஆன்மீக ஞான ஒளியை இறைவழிபாடு மூலம் பெறும் சிறப்பு வாய்ந்த நன்னாளே தீபாவளித் திருநாள்.
தேசிய ஒற்றுமைக்கு இது ஒரு சிறந்த நாளாகும். எல்லா மதங்களிலும் விளக்கு ஏற்றுவதன் காரணம் இருளையும் அறியாமையையும் அகற்றி ஒளியை பரப்புவதற்கே. தீபாவளியும் அதன் எதிர்பார்ப்புகள் நிறைந்த தீப ஒளியும் சமூகங்களுக்கு மத்தியிற் சிறந்த புரிந்துணர்வுக்கான சந்தர்ப்பத்தை வழங்குகின்றது.
மிக நீண்டகாலமாக எமது மக்களைப் பிரித்து வைத்திருந்த எல்லா வேறுபாடுகளையும் களைவதற்குரிய தருணமாக இத்தீபாவளித் திருநாளைக் கொண்டாடுவோம்.
இந்த ஒளியை நாம் அணைய விடாமல் பாதுகாத்து மறுபடியும் இருளுக்குள் மூழ்காமல் எம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்
இன்று நம் தேசம் ‘நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு’ எனும் அரசாங்கத்தின் தேசிய கொள்கைக்கு அமைவாக ஒளிநிறைந்த வளர்ச்சிப் பாதையிற் பயணிக்க ஆரம்பித்திருக்கிறது.
அனைத்துத் துறைகளிலும் நாம் முன்னேற்றம் காண முயல்கின்றோம். இன்று உலகையே அச்சுறுத்திவரும் கொவிட்-19 நோய்த்தொற்றிலிருந்து இலங்கை மக்களைப் பாதுகாக்கும் பணியினை அரசாங்கம் மக்கள் அனைவரதும் ஒத்துழைப்புடன் வெற்றிகரமாக செயற்படுத்தி வருகின்றது.
கொவிட்-19 நோய்த்தொற்றிருந்து இலங்கைத் திருநாடு விரைவில் மீள்வதற்கும் எம் மக்களுக்கு எல்லா சுபீட்சங்களையும் தரும் நல்லதோர் எதிர்காலத்தின் ஆரம்ப நாளாக இத்தீபாவளித் திருநாள் அமையட்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.