இலங்கையின் பரிதாப நிலையும், இந்தியாவின் சாதனைக்கு காரணமும்!
March 19, 2018 7:41 am GMT
அமைதியான தலைவர் அதே சமயம் எந்தவொரு இக்கட்டான நிலையிலும் மனம் தளராது அணியை சிறப்பாக வழிநடத்தி வெற்றியை எட்டும் வீரர் என்ற பெயரைப் பெற்றவர் கூல் கேப்டன் தோனி. இந்த பெயரைப் பெற்றுக் கொள்ள தோனி கடந்து வந்த பாதை அசாத்தியமானது என்றே கூற வேண்டும்.
அந்த வரிசையில் தற்போது தினேஷ் கார்த்திக்… அதாவது இலங்கையின் 70 ஆவது சுதந்திரத் தினத்தை முன்னிட்டு நடந்த சுதந்திரக்கிண்ண முத்தரப்பு ரி 20 தொடரில் இந்திய அணிக்காக கிண்ணத்தைக் கைப்பற்றிக் கொடுத்த வீரர் இவர்.
பரபரப்படைந்த களத்தில் பதறாது சாதித்த வீரராக புகழப்படுகின்றார். இருந்தாலும் தோனியின் இடத்தை எட்டுவதற்கு இன்னமும் அவருக்கு காலம் தேவைப்படும் என்பதும் ஏற்றுக் கொள்ள வேண்டிய விடயமே.
எப்போதுமே தோனி இல்லை என்றால் அந்த இடத்திற்கு தினேஷ் கார்த்திக்கின் பெயரை பலர் பரிந்துரைச் செய்கின்றார்கள். காரணம் தோனியைப் போன்ற சிறப்பான வீரராகவே இவர் கருதப்படுகின்றார். 14 வருடங்களாக அவர் கற்றுக் கொண்டது அமைதி, நேர்த்தியான ஆட்டம் அதுவே இப்போது அவரது பெயரை நிலைக்க வைத்துள்ளது எனலாம்.
நிற்க நடந்தது என்ன? இலங்கையின் கௌரவக் கிண்ணமாக கருதப்படும் சுதந்திரக்கிண்ணத் தொடரில் விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பங்களாதேஷை வென்றது.
கொழும்பு, ஆர். பிரேமதாச மைதானத்தில் அரங்கத்தையே அமைதியடைய வைத்து, விழிகளில் வியப்பினை நிறைத்த போட்டியாக அமைந்தது அந்த இறுதிப் போட்டி.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தெரிவு செய்தது. அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 166 ஓட்டங்களைப் பெற்றது.
பங்களாதேஷ் அணி சார்பில் ஷபிர் ரஹ்மான் 77 ஓட்டங்களையும், முஹமடுல்லா 21 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் சாஹல் 3 விக்கெட்டுகளையும், உனத்கட் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியதொடு சுந்தர் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.
167 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து தனது இலக்கை அடைந்தது. இதன்
மூலம் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்று இலங்கையின் கௌரவத்தை தட்டிச் சென்று விட்டது. இதுவே நடந்தது…
இந்த வெற்றியில் முக்கிய பங்கு தினேஷ் கார்த்திக் வசமானது. இத்தனை வருடகாலம் அவருக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டு, அவமானங்கள் பரிசாக கிடைத்து வந்த நிலையிலும் கூட “நான் மனம் தளராதவன்” என நிரூபித்து விட்டார்.
“பரபரப்பான கட்டம் வெற்றி பங்களாதேஷ் அணிக்கே என்று பலரும் எதிர்பார்த்திருந்த தருணத்தில் சௌம்யா சர்கர் பந்து வீச வருகின்றார். வெற்றிக்காக தேவைப்படுவது 6 பந்துகளுக்கு 12 ஓட்டங்கள் களத்தில் தினேஷ், விஜய் ஷங்கர் என்ன நடக்கப்போகின்றது என தெரியாத நிலையில் அரங்கமே அதிர்ந்து நிற்கின்றது.
ஷங்கர் சற்றே சொதப்பினாலும் ஒரு நான்கு ஓட்டத்தை பெற்றுக் கொடுத்து 5 ஆவது பந்தில் ஆட்டமிழந்து சென்று விடுகின்றார். எப்படியோ 1 பந்துக்கு 5 ஓட்டங்கள் தேவைப்படும் நிலையில் தினேஷ் ஆட வருகின்றார்.
அவர் பதறவில்லை, தோற்றுவிடுவோம் என அஞ்சவில்லை, அர்ஜூனன் கண்களுக்கு கிளி தென்பட்டது போல், தினேஷின் கண்களுக்கு வெற்றி – 6 ஓட்டம் என்பது மட்டுமே தென்பட்டது போலும்…. கடைசி பந்தினை ஆறு ஓட்டங்களுக்கு விரட்டி அமைதியாக களத்தில் பெற்ற வெற்றியை கைகளைத் தூக்கி காட்டினார்.
குறிப்பாக தற்போது விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ள பாம்பு நடனம் எதனையும் அவர் ஆடவில்லை. எதிரணியை கேலி செய்யவில்லை, திமிர் பிடித்து ஆடவில்லை மைதானத்தில் ஓட வில்லை. அப்போது இலங்கை ரசிகர்கள் கண்களுக்கு ஜாம்பவான் சங்கக்கார சற்றே தென்பட்டிருப்பார் கார்த்திக் மூலம்.
இந்த பரபரப்பான தருணத்தில் ஷங்கர் ஆடுகளத்தில் சொதப்பிய போதும் ஆத்திரமடையாமல், ஆவேசம் அடையாமல் அவரை நிதானமாக வழிநடத்தி தினேஷ் தனி முத்திரையைப் பதித்து விட்டார்.
நீண்ட நாட்களாக விமர்சனங்களுக்குள் சிக்கிய அவருக்கு தனது திறமையை நிரூபித்துக் கொள்ள இந்தத் தொடர் அமைந்து விட்டது. வெற்றியை தீர்மானித்த ஒரு பந்து அமைந்து விட்டது.
அதிலும் ஏற்கனவே இலங்கைக்கு எதிரான போட்டியில் பங்களாதேஷ் அணி வீரர்கள் செய்த மோசமான செயற்பாடுகள் காரணமாக இலங்கை ரசிகர்கள் இந்தியாவிற்றுகு ஆதரவு வழங்கியிருந்தனர்.
இறுதிப் போட்டிக்கு இலங்கை தகுதி பெறாவிட்டாலும் இந்தியா கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே அவர்களின் ஆவேசமாக இருந்தது என்பதனை இந்தப் போட்டியை பார்த்தவர்கள் அனைவரும் அறிந்து கொண்டிருந்தனர்.
இந்திய அணியில் விராட் கோ`ஹ்லி, தோனி ஆகிய முக்கிய வீரர்கள் மற்றும் புவனேஸ்வர் குமார், முகமது ஷமி, ஹர்திக் பாண்ட்யா ஆகியோரும் கூட இடம் பிடிக்காத நிலையில் இந்திய அணியின் பயமறியாத இளம்கன்றுகள் இந்தியாவிற்கு பெருமை சேர்த்தனர்.
1998 ஆம் ஆண்டு இலங்கையை வீழ்த்தி இந்தியா கிண்ணத்தைக் கைப்பற்றி இருந்தது. அதற்கு பதிலடி கொடுக்க 20 வருடங்களுக்கு பின்னர் இலங்கைக்கு கிடைத்த
வாய்ப்பினை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை. நிலை பரிதாபமானது. பங்களாதேஷ் அணியுடன் அவமானத் தோல்வி இரண்டு கிடைத்தது.
மறுபக்கம் இலங்கையை வீழ்த்திய திமிருடன் இருந்த பங்களாதேஷ் அணியும் வெற்றி பெற்றியைப் பெற முடியவில்லை. 20 வருடங்களின் பின்னர் மீண்டும் இந்தியா முத்திரை பதித்து விட்டது.
இந்தத் தொடரில் இந்தியா வெற்றி பெறக் காரணம் இளம் வீரர்களே. பரபரபரப்பான கட்டத்திலும் நிதானத்துடன் ஆடியமை, பதற்றத்தை விடுத்தமையும், மனதளவில் கொண்ட நம்பிக்கையுமே இந்தியா இந்தத் தொடரை வெல்ல முக்கிய காரணம்.
அதேபோன்று சுழல்பந்து வீச்சாளரான சஹால் இறுதிப்போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியமையும் வெற்றிக்கு காரணம். போட்டியின் திருப்பு முனைஇவர் என்றும் சொல்லி விடலாம்.
இறுதிப் போட்டிக்குள் நுழைந்த பங்களாதேஷ் அடுத்தடுத்து விக்கெட்டுகளைத் தாரைவார்த்ததும் கூட இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தது.
அனைத்தையும் தாண்டி வரலாற்றில் முதல் தடவையாக இலங்கை ரசிகர்கள் இந்தியாவிற்கு கொடுத்த ஆதரவும் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது எனலாம். இலங்கை ரசிகர்களும் கூட இலங்கை தோற்றாலும் இந்தியா இறுதிப்போட்டியில் வெல்ல வேண்டும் என அரங்கை அதிர வைத்தது, இந்தியக் கொடிகளை அசைத்து ஆதரவு தெரிவித்தது அனைத்தும் இந்தியாவிற்கு மனதளவில் தைரியத்தைக் கொடுத்தது என்றே கூற வேண்டும்.
-
கிரிக்கெட் மைதானங்களில் மீண்டும் ரசிகர் கூட்டம்!
உலகையே ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ்...
-
சொன்னதைச் செய்தது சென்னை! சிறந்த தலைமைத்துவம் மகுடம் சூடியது!!
ஐ.பி.எல் என்றாலே கிரிக்கெட் ரசிகர்களிடையெ ஒரு போதை...