இலங்கையின் விசாலமான காற்றாலை மின் நிலையத்தை மன்னாரில் திறந்து வைத்தார் பிரதமர்!
In இலங்கை December 8, 2020 6:58 am GMT 0 Comments 1676 by : Dhackshala

மன்னாரில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இலங்கையின் விசாலமான காற்றாலை மின் நிலையம் இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மின்சக்தி அமைச்சர் டளஸ் அழகப்பெரும, இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க ஆகியோரின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
மன்னார் – தலைமன்னார் பிரதான வீதியில் நடுகுடாவில் அமைக்கப்பட்டுள்ள குறித்த ‘தம்பபவனி’ காற்றாலை மின் நிலையம், நாட்டின் மின் உற்பத்தியில் மற்றொரு வரலாற்று மைல்கல்லாக தேசிய கட்டமைப்பில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் முதல் நடவடிக்கையாக 100 மெகாவோட் மின்சாரத்தை இவ்வாரம் முதல் தேசிய மின்சார கட்டமைப்பில் இணைத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
சுமார் ஒரு வருடத்திற்கும் குறைவான காலப்பகுதியில் நிர்மாணப்பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ள இந்த மின் ஆலையின் ஊடாக ஒரு அலகு மின்சாரத்தை 8 ரூபாய் என்ற குறைந்த செலவில் உற்பத்தி செய்துக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் அமைச்சர் டக்கஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், கே.திலீபன், வட மாகாண ஆளுநர் பி.எச்.எம்.சார்ள்ஸ், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டி மேல் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி ஒதுக்கீட்டில், 141 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீட்டில் குறித்த காற்றாலை மின் உற்பத்தி மையம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.