இலங்கையில் இராணுவத்தளம் அமைக்கும் திட்டம் இல்லை – அமெரிக்கா
In ஆசிரியர் தெரிவு April 1, 2019 2:25 am GMT 0 Comments 3798 by : Dhackshala
இலங்கையில் நிரந்தரமான இராணுவத்தளம் அமைக்கப்போவதாக வெளிவரும் செய்திகளில் உண்மை இல்லையென அமெரிக்கா மறுப்புத் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இலங்கையுடனான இராணுவ ரீதியிலான ஒத்துழைப்புக்களை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நிரந்தர இராணுவத்தளத்தை அமைக்க அமெரிக்கா திட்டமிடுவதாக கடந்த சில நாட்களாக, தொடர்ச்சியாக கூறப்பட்டு வருகிறது.
இதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கிவிட்டதாகவும், அவ்வாறு இராணுவத்தளம் ஒன்று அமைக்கப்படுமானால் அது எதிர்க்காலத்தில் இலங்கைக்கு பாரிய ஆபத்தாக அமையும் என்றும் எதிரணியினரால் கடுமையாக குற்றம் சுமத்தப்பட்டது.
இந்நிலையிலேயே, கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக பேச்சாளர் ஒருவர் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
இலங்கையுடன் இராணுவ ரீதியான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு அமெரிக்கா முயற்சிக்கின்ற போதிலும், இங்கு இராணுவத்தளத்தை அமைப்பதற்கு எந்தவொரு திட்டமும் இல்லை என தெரிவித்துள்ளார். அவ்வாறான திட்டம் ஒருபோதும் தமது பாதுகாப்பு ஒத்துழைப்பின் அங்கமாக இருக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
எதிர்காலத்தில் இங்கு, அமெரிக்காவின் எந்தவொரு நிரந்தர தளத்தையும் அமைக்கும் திட்டங்கள் எதுவும் இல்லையென தெரிவித்த அமெரிக்க தூதரக பேச்சாளர், திருகோணமலை துறைமுகத்தில் அமெரிக்க விமானந்தாங்கி கப்பல்கள் எதுவும் தரித்து நிற்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு எந்த நேரத்திலும், அமெரிக்க கடற்படைக் கப்பல்கள் இலங்கைக்கு வரக்கூடியளவுக்கு இலங்கை அதிகாரிகளுடன் நெருக்கமாகப் பணியாற்றுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், விமானந்தாங்கி கப்பல்கள் எதுவும் இலங்கைக்கு வரும் திட்டம் எதுவும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.