இலங்கையில் கொரோனா தொற்று தொடர்பான முழுமையான விபரம்
In இலங்கை January 25, 2021 4:11 am GMT 0 Comments 1444 by : Yuganthini

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாத்திரம் 3பேர் உயிரிழந்துள்ளனர்.
அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, ‘கொழும்பு 14, மருதானை மற்றும் பூஜாப்பிட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 3 பெண்களே கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
கொழும்பு – 14 பகுதியைச் சேர்ந்த 77 வயதான பெண்ணொருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தபோது, கொவிட் -19 கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டதை அடுத்து, முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, சிகிச்சை பெற்றுவந்த நிலையில், கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா, உயர் இரத்த அழுத்தம், ஈரலில் ஏற்பட்ட தொற்று மற்றும் சிறுநீரக நோய் காரணமாக கடந்த 2021 ஜனவரி 23 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
அதேபான்று மருதானை பகுதியைச் சேர்ந்த 84 வயதான பெண்ணொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா மற்றும் மாரடைப்பு காரணமாக கடந்த 2021 ஜனவரி 21 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
மேலும், பூஜாபிட்டி பகுதியைச் சேர்ந்த 65 வயதான பெண்ணொருவர், கண்டி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவேளையில், கொவிட் -19 கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டதை அடுத்து தெல்தெனிய ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, சிகிச்சை பெற்றுவந்த நிலையில், கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா மற்றும் இரத்தம் விஷமானமை காரணமாக கடந்த 2021 ஜனவரி 24 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
இதன்படி இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 283 ஆக அதிகரித்துள்ளது’ என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நாட்டில் கொரோன தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 58,000 ஐ அண்மித்துள்ள அதேவேளை கடந்த சில தினங்களாக 25 மாவட்டங்களிலும் தொற்றாளர்கள் இனங்காணப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் அபாயமுடைய பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டிருந்த மேல் மாகாணத்தில் தற்போது தொற்றாளர்கள் இனங்காணப்படும் அளவு 50 வீதம் குறைவடைந்துள்ள போதிலும், ஏனைய மாகாணங்களில் அபாயம் அதிகரித்து வருவதாக சுகாதார தரப்புக்கள் எச்சரித்துள்ளன.
அதற்கமைய நேற்று 25 மாவட்டங்களிலும் 843 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக கொரோனா தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
கொழும்பிலேயே அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் இம்மாவட்டத்தில் 197 தொற்றாளர்களும் அதற்கு அடுத்தபடியாக கண்டியில் 110 தொற்றாளர்களும் , கம்பஹாவில் 106 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குருணாகலில் 40, காலியில் 38, இரத்தினபுரியில் 31, களுத்துறையில் 28, மாத்தளையில் 27, கேகாலையில் 24, மாத்தறையில் 22, புத்தளத்தில் 21, மன்னாரில் 15, அம்பாறையில் 13, அம்பாந்தோட்டையில் 12, வவுனியாவில் 9, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் தலா 7, பதுளை மற்றும் யாழ்ப்பாணத்தில் தலா 4, திருகோணமலையில் 3, மொனராகலையில் 2, அநுராதபுரம் , கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் தலா ஒவ்வொன்று என 25 மாவட்டங்களிலும் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
அதற்கமைய நாட்டில் மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 58, 430 ஆக உயர்வடைந்துள்ளது. இவர்களில் 49,684 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதோடு, 8463 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.