இலங்கையில் கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை 140ஆக அதிகரிப்பு – முழு விபரம்!
In இலங்கை December 7, 2020 2:32 am GMT 0 Comments 1363 by : Dhackshala
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் மூவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 140ஆக அதிகரித்துள்ளது.
கோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 98 வயதான ஆணொருவர் கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர் என இனங்காணப்பட்ட பின்னர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த டிசம்பர் மாதம் 06ஆம் திகதி உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொவிட் தொற்று நிமோனியா நிலையாகும்.
காஹதுட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 80 வயதான ஆணொருவர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் டிசம்பர் மாதம் 05ஆம் திகதி உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொவிட் 19 தொற்றுக்கு உள்ளானதுடன் சிறுநீரக செயலிழப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கோன பிரதேசத்தைச் சேர்ந்த 71 வயதான ஆணொருவர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொவிட் 19 தொற்றுடன் நிமோனியா நிலை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 27ஆயிரத்து 877ஆக அதிகரித்துள்ளது.
மேலும் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து நேற்று 370 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். இதனையடுத்து, கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 460 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் தொற்றுக்கு உள்ளான ஏழாயிரத்து 273 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.