இலங்கையில் 100ஐ அண்மிக்கும் கொரோனா தொற்றாளர்களின் மரணங்கள்
In இலங்கை November 25, 2020 2:33 am GMT 0 Comments 1570 by : Dhackshala

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த மரணங்கள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.
இதற்கமைவாக இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 94 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தனவின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று ஆண்களும் பெண்ணொருவரும் உயிரிழந்துள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது.
கினிகத்தேனை பிரதேசத்தைச் சேர்ந்த 74 வயதான ஆண் ஒருவர், கடந்த 22ஆம் திகதி உயிரிழந்தார். சிறைச்சாலை வைத்தியசாலையிலிருந்து ராகம போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார்.
கொரோனா வைரஸ் தொற்றுடன் வயிற்றுப்போக்கு காரணமாக ஏற்பட்ட பல உறுப்புகளின் செயலிழப்பு அவரின் உயிரிழிப்பிற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம், சியம்பலாபே தெற்கு பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதான ஆண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடந்த 22 ஆம் திகதி உயிரிழந்தார்.
நீண்டநாள் நீரிழிவு நோயுடன் கொரோனா தொற்றக்கு உள்ளானதினால் நோய் அதிகரித்தமை அவரின் உயிரிழிப்பிற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு 15ஐச் சேர்ந்த 73 வயதான பெண்ணொருவர் நேற்றைய தினம் உயிரிழந்தார். குறித்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலிருந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அவர் உயிரிழிந்தார்.
உயிரிழிப்பிற்கான காரணம், அழற்சி மற்றும் கொரோனா நிமோனியா நிலைமையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண்டாரகம அட்டுலுகமை பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதான ஆண் ஒருவர், நேற்று உயிரிழந்தார். பாணந்துறை ஆதார வைத்தியசாலையிலிருந்து ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்தார்.
குறித்த நபர், கொரோனா தொற்றுக்கு உள்ளானதுடன் நாள்பட்ட கல்லீரல் நோய் மூளையை பாதித்தமை மற்றும் வீக்கம் ஏற்பட்டமை உயிரிழப்பிற்கான காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நான்கு மரணங்களுடன் இலங்கையில் கொரோனா நோயினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 94 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.