இலங்கையை மீண்டும் வாட்டி வதைக்கும் இயற்கை
In சிறப்புக் கட்டுரைகள் May 23, 2018 4:34 am GMT 0 Comments 4067 by : Arun Arokianathan
இலங்கையில் கடந்த சில மாதங்களாக வரட்சியான காலநிலை நீடித்து வந்ததைத் தொடர்ந்து ,கடந்தசில தினங்களாக கடும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை மீண்டுமாக பல பகுதிகளை வாட்டி வதைத்துக்கொண்டிருக்கின்றது .வளிமண்டத்தில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை காரணமாகவே சில தினங்களாக சீரற்ற காலநிலை நீடித்து வருகின்றது. இக்காலநிலையின் விளைவாக மழையுடன் கூடிய காலநிலை நாட்டில் நிலவுகின்றது.
இதன் விளைவாக 14 மாவட்டங்களில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதோடு 52 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 1500 பேர் இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்து தற்கதாலிக முகாம்களில் தங்கியுள்ளனர். மழை, மண்சரிவு காரணமாக 08 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.
இவ்வாறான நிலையில், ‘வெள்ளம் ஏற்பட்டுள்ள பிரதேசங்களுக்கு வேடிக்கை பார்க்க செல்ல வேண்டாம்’ என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ள இதேவேளையில், ‘மழை காலநிலை அடுத்தவரும் சில நாட்களுக்கு நீடிக்கும்’ என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. ‘தொடர்ந்தும் மழை பெய்யுமாயின் மண்சரிவு அபாயம் மிக்க பிரதேசங்களில் வாழும் மக்கள் விழிப்பாக இருக்குமாறும், பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனமும் முன்னெச்சரிக்கை விடுத்திருக்கின்றது.
இதேநேரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இச்சீரற்ற காலநிலை ஏற்படுத்தியுள்ள விளைவுகள் தொடர்பில் கவனம் செலுத்தி பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனுக்குடன் நிவாரணம் வழங்கத் தேவையான ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளனர். இதற்குத் தேவையான அறிவுறுத்தல்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் வழங்கியுள்ளனர். அந்தந்த மாவட்ட செயலகங்களுக்கு நிதியொதுக்கீடுகளும் வழங்கப்பட்டுள்ளன.
இதேவேளை, நாட்டின் சீரற்ற காலநிலையைக் கருத்தில் கொண்டு மீட்புப் பணிகளில் ஈடுபடுவதற்காக 24 மணித்தியாலயமும் தயார் நிலையில் இருக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முப்படையினருக்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாகத் தோற்றம் பெற்றுள்ள நிலைமைக்கு பதிலளிக்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இச்சந்தர்ப்பத்தில் பெருநகரங்கள் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க, மழை நீர் வழிந்தோடுவதற்கு தடையாக அமைக்கப்பட்டுள்ள நிர்மாணங்களையும் கட்டடங்களையும் அப்புறப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கி இருக்கின்றார்.
நாட்டில் அண்மைக் காலமாக சிறிதளவு மழை பெய்தாலும் வெள்ள நிலைமை ஏற்படுவது வழமையாகி விட்டது. இவ்வாறான நிலைமைக்கு இந்நாடு முன்னொரு போதுமே முகம்கொடுக்கவில்லை. இப்போது இந்நிலைமை ஏற்பட முக்கிய காரணம் மழைநீர் வழிந்தோடவென இயற்கையாக அமைந்திருந்த வடிகான்களும், கால்வாய்களும், சதுப்பு நிலங்களும் நிரப்பப்பட்டு கட்டடங்கள் அமைக்கப்பட்டமையாகும். இதன் விளைவாக மழைநீர் சீராக வடிந்தோட முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. அதனால் சிறு மழையும் கூட பெருவெள்ள நிலையை ஏற்படுத்தி விடுகின்றது.
மேலும் மழைநீர் தேங்கும் இடங்களில் நுளம்புகள் பல்கிப் பெருகும் நிலைமை ஏற்படும். அவற்றின் ஊாடாக நுளம்புகள் பரப்பும் நோய்கள் குறிப்பாக டெங்கு நோய் தீவிரமடையும். அத்தோடு மழைநீர் தேங்கிநிற்கும் இடங்களில் சில தோல் நோய்களும் கூட பரவ முடியும்.
மழைநீர் சீராக வடிந்தோடும் வடிகான்களும், கால்வாய்களும், சதுப்பு நிலங்களும் நிரப்பப்பட்டு கட்டட நிர்மாணங்கள் ஏற்படுத்தப்பட்டதன் விளைவாகவே இவ்வாறான பல்வேறு பிரச்சினைகளுக்கும் முகம்கொடுக்கும் நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. இது தொடர்பில் சுற்றாடல் துறை நிபுணர்களும் ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளனர்.
Kelani River in #Kithulgala Stay Safe #FloodSL #Lka pic.twitter.com/1mZDiikNC5
— Isuru Sam (@isurusam) May 21, 2018
இருந்தும் மழைக் காலங்களில் வெள்ள நிலைமை ஏற்படும் போது வடிகான்களும், சதுப்பு நிலங்களும் நிரப்பப்பட்டு அமைக்கப்பட்டிருக்கும் கட்டடங்கள், நிர்மாணங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும். வெள்ளநீர் வடிந்தோடிய பின்னர் அது தொடர்பில் எவரும் கவனம் செலுத்தாத நிலைமையே காணப்படுகின்றது. இதனை அதிகாரிகள் கூட வசதியாக மறந்து விடுகின்றனர்.
ஒரு சிலர் செய்யும் தவறானதும் பிழையானதுமான செயற்பாடுகளால் பெரும்பாலான அப்பாவி மக்கள்தான் பாதிக்கப்படுகின்றனர். இதில் எவ்விதத்திலும் நியாயம் காண முடியாது.அவர்கள் சில சமயம் இருப்பிடங்களை விட்டு வெளியேறி நலன்புரி நிலையங்களில் தங்கும் துரதிர்ஷ்ட நிலைமைக்கும் கூட முகம்கொடுக்கின்றனர். இந்நிலைமை மாற வேண்டும். அதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது அவசியம்.
ஆகவே மழைநீரின் சீரான வடிந்தோடலுக்கு இடையூறாக அமைக்கப்பட்டுள்ள கட்டட நிர்மாணங்கள் மாத்திரமல்லாமல் எதிர்காலத்தில் அமைக்கப்படும் கட்ட நிர்மாணங்கள் தொடர்பிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விஷேட கவனம் செலுத்த வேண்டும். இது விடயத்தில் பக்கச்சார்பற்ற வகையில் சட்டங்களை நடைமுறைப்படுத்துவது மிகவும் அவசியம். அவ்வாறான ஏற்பாடுகளின் ஊடாகவே இப்பிரச்சினைக்கு தீர்வு காணக்கூடியதாக இருக்கும்.
அப்போது சீரற்ற காலநிலையால் மக்கள் எதிர்கொள்ளும் பாதிப்புக்களையும், அசௌகரியங்களையும் ஒன்றில் தவிர்த்து கொள்ளவோ அல்லது குறைத்துக் கொள்ளவோ முடியும். இவ்விடயம் தொடர்பில் மக்கள் மத்தியிலும் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். அப்போது இயற்கை அமைப்புக்கு, குறிப்பாக மழைநீர் சீராக வடிந்தோடுவதற்கு இடையூறு ஏற்படுத்தப்படு-ம் வகையில் இடம்பெறும் நடவடிக்கைகளையும் தவிர்த்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.
Climate change anyone? #SriLanka has been in cyclic extreme weather patterns for at least 5yrs, still policy makers+general public only take notice when Colombo gets flooded #lka @dmc_lk https://t.co/Y7A6B7kS8M
— Amantha (@AmanthaP) May 23, 2018
கடந்த ஐந்து வருடகாலமாக காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் கடுமையான காலநிலைகளுக்கு மாறிமாறி இலங்கை முகங்கொடுத்துவருகின்றபோதும் அரசாங்கம் இது தொடர்பாக போதிய அக்கறையைச் செலுத்தவில்லை. பாதிப்பு நடந்த பின்னர் பரிகாரம் செய்யும் முயற்சிகளே நடக்கின்றனவே தவிர பாதிப்புக்கள் ஏற்பட முன்னர் அதனைத் தடுப்பதற்கான ஏற்பாடுகளைக் காணமுடியவில்லை. இனியேனும் தாமதிக்காது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.