இலங்கை அரசு தமிழர்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமிக்கவே உழைத்து வருகின்றது- கலையரசன்
In இலங்கை January 27, 2021 5:38 am GMT 0 Comments 1596 by : Yuganthini
உலக நாடுகள் கொரோனாவை ஒழிக்க உழைத்துவருகின்றது. ஆனால் இலங்கை அரசு தமிழர்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமிக்க உழைத்து வருகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் தவராஜா கலையரசன் தெரிவித்துள்ளார்.
திருக்கோவில் பிரதேசத்தில், நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நிகழ்வில் தவராஜா கலையரசன் மேலும் கூறியுள்ளதாவது, “இந்நாட்டில் இருக்கின்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டை பாரக்கின்றபோது, தமிழ் மக்கள் இந்நாட்டில் வாழலாமா என்ற ஐயப்பாடு எழுகின்றது.
அரசின் செயற்பாடுகள் நாட்டில் ஆரோக்கியமான சூழலை உருவாக்குவதற்கான விடயமாக இல்லை. மாறாக தமிழர்களின் நிலங்களை எவ்வாறு கையகப்படுத்தலாம், தமிழர்களை அவர்களது பூர்வீக இல்லங்களில் இருந்து வெளியேற்றலாம் என்ற திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. இவை நிறுத்தப்பட வேண்டும்.
இன்று நேற்று அல்ல அறுபது வருடங்களுக்கு மேலாக இந்த நாட்டில் சொல்லமுடியாத விடயங்களை தொடர்ச்சியாக அனுபவித்த தமிழர்களின் வாழ்விடங்களை அகற்றுவதற்கும், ஆலயங்களை கையகப்படுத்துவதற்கும் தொடர்ச்சியான முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகின்றது.
இன்று மனிதர்கள் மாத்திரமல்ல கால்நடைகள் கூட இலங்கையில் வாழமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக மட்டக்களப்பு மயிலத்தமடு மேச்சல் தரையில் மேய்ச்சலுக்காக விடப்பட்ட கால்நடைகள் கூட ஈவிரக்கமற்ற முறையில் அண்மை காலமாக கொல்லப்படுகின்றது. இவ்வாறு ஈவிரக்கமற்ற முறையில் அராஜக அரசு செயற்படுகின்றது.
தற்போது அரசியல் ரீதியாக பின்னடைவை சந்தித்து வரும் இந்த அரசு பெரும்பான்மை மக்கள் மத்தியில் தமிழ் மக்களுக்கு இவ்வாறான நிலை, எமது அரசினால் மேற்கொள்ளப்படுகின்றது என்ற விடயங்களை சொல்லி பெரும்பான்மை சமூகத்தின் மத்தியில் தமக்கான ஆதரவினை பெருக்கி கொள்ள முனைகின்றதா என்ற கேள்வி எமக்கு எழுகின்றது.
இந்த அரசாங்கம் இவ்வாறான விடயங்களை நிறுத்தி, சமத்துவமான முறையில் மக்களை ஒன்றிணைக்கும் பணிகளை முன்னெடுக்க வேண்டும். ஐக்கிய நாடு சபைகள் கூட இலங்கை அரசை மிக வன்மையாக கண்டித்துள்ளது. இந்நிலை தொடருமானால் நாட்டில் மிக மோசமான சூழல் ஏற்படும்” என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.