இலங்கை சிறையில் வாடும் மாணவர்களை விடுவிக்க மாபெரும் போராட்டம் – இராமேஸ்வர மீனவர்கள்

இலங்கை சிறையில் வாடும் மாணவர்களை விடுவிக்காவிட்டால், மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தவுள்ளதாக இராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் 22 ஆம் திகதிக்குள் மாணவர்களை விடுவிக்காவிட்டால், தாங்கள் மாபெரும் போராட்டத்தை ஆரம்பிக்கப்போவதாக மீனவர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்துள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் 12ஆம் திகதி இராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் 8 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். இதில், 17 வயதுடைய பிளஸ்-1 மாணவன் ஷியாம் டேனியல், கல்லுாரி முதலாம் வருடத்தில் படிக்கும் 18 வயதுடைய மாணவன் பாண்டித்துரை ஆகியோரும் அடங்குவர்.
இந்த மாணவர்களை விடுவிக்கக் கோரி இராமேஸ்வரம் மீனவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியும், இலங்கை அரசாங்கம் இதனை கண்டுகொள்ளவில்லை. இதனிடையே, ஏப்ரல் 26ஆம் திகதி வரை மாணவர்களின் தடுப்புக்காவலை நீடித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால், மாணவர்களின் உறவினர்களும், மீனவர்களும் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
இந்நிலையில், மாணவர்களை விடுதலை செய்யக்கோரி கடந்த 12ஆம் திகதி இராமேஸ்வரம், தங்கச்சிமடத்தில் உள்ள மாணவன் துரைப்பாண்டி வீட்டின் முன்பு, உறவினர்கள் மற்றும் சக மாணவர்கள் உண்ணாவிரதம் இருக்க முயன்றனர்.
இதுகுறித்த தகவல் அறிந்து அங்கு சென்ற வருவாய்த்துறை மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள், “மாணவர்களின் விடுதலை குறித்து ஏப்ரல் 16ஆம் திகதி நேரில் விளக்கம் அளிக்கிறோம்” என்று உறவினர்களிடம் உறுதியளித்தனர். இதையடுத்து, போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் நேற்று மாணவர்களின் விடுதலை குறித்து பேச்சுவார்த்தை நடத்த வருவதாகச் சொன்ன மீன்வளத்துறை அதிகாரிகளை எதிர்பார்த்து மாணவர்களின் உறவினர்கள் பலமணி நேரம் தங்கச்சிமடத்தில் காத்திருந்தனர். ஆனால், சொன்னதுபோல் அதிகாரிகள் வரவில்லை.
இதுகுறித்து மாணவன் பாண்டித்துரையின் தாய் பானுமதி கூறுகையில், “95 நாட்களாக சிறையில் வாடும் மாணவர்களுக்கு சுகாதாரமற்ற உணவு, குடிநீர் வழங்கி சித்திரவதை செய்கின்றனர்.
மாணவர்கள் உடல் சோர்ந்து, மன ரீதியாக பாதித்துள்ளனர். அவர்களை விடுவிப்பது தொடர்பாக எங்களிடம் பேச்சு நடத்தவிருந்த மீன்வளத்துறை அதிகாரிகள் வராதது ஏமாற்றமளிக்கிறது.
எனவே, வரும் 22 ஆம் திகதிக்குள் மாணவர்களை இலங்கை அரசாங்கம் விடுவிக்காவிட்டால், மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.