இலங்கை முஸ்லிம்களை தமது நாட்டிற்கு வருமாறு மாலைதீவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அழைப்பு
In ஆசிரியர் தெரிவு December 16, 2020 5:18 am GMT 0 Comments 2754 by : Dhackshala

இலங்கை முஸ்லிம்களை தமது நாட்டிற்கு வருமாறு மாலைதீவு அரசாங்கம் அழைப்பு விடுக்க வேண்டுமென அந்த நாட்டின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் தன்யா மமூன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் சடலங்களுக்கான இறுதிக் கிரியைகளை இலங்கை ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமைவாக மாலைதீவில் நடத்துவது குறித்து ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலி ஆராய்ந்து வருவதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா ஷஹீட் தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையிலேயே மாலைதீவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் தன்யா மமூன் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
மேலும் தெரிவித்துள்ள அவர், இலங்கை முஸ்லிம்களை மாலைதீவிற்கு வருமாறு மாலைதீவு அரசாங்கம் அழைப்பு விடுக்காதமை தனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களுக்கு தங்களின் மத நம்பிக்கையின் அடிப்படையில் இறுதிசடங்கினை நடத்துவதற்கான சிறுபான்மை முஸ்லிம்களின் உரிமைகளை இலங்கை அரசாங்கம் மதிக்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேவேளை கொரோனா வைரஸினால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்களை மாலைதீவில் அடக்கம் செய்வதற்கான அனுமதி அந்த நாட்டிடம் கோரப்பட்டமை குறித்து இலங்கை அரசாங்கத்திற்கு எதுவும் தெரியாது என ஊடக பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.