இலங்கை விவகாரத்தில் மனித உரிமை பேரவை நடுநிலைத்தன்மையை பேணவில்லை- வாசுதேவ
In ஆசிரியர் தெரிவு January 31, 2021 3:50 am GMT 0 Comments 1379 by : Yuganthini
இலங்கை விவகாரத்தில் மனித உரிமை பேரவை நடுநிலைத்தன்மையை பேணவில்லை என நீர்வழங்கல் துறை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குற்றஞ்சாட்டியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “ஐக்கிய நாடுகள் சபையுடன் இலங்கை நட்புறவுடன் செயற்படுகிறது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக யுத்தம் முடிவடைந்த காலத்தில் இருந்து பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் உள்ள பொறிமுறையின் அடிப்படையில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டன.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையினை கையாள வகுக்கப்பட்ட திட்டங்களை 2015 ஆம் ஆண்டு ஆட்சியமைத்த நல்லாட்சி அரசாங்கம் செயற்படுத்தவில்லை.
மனித உரிமை பேரவை விவகாரம் கூட அரசியல் பழிவாங்கலுக்காக பயன்படுத்திக்கொள்ளப்பட்டது. 30 இன் கீழ் ஒன்று பிரேரணைக்கு இணையனுசரணை வழங்குவதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அப்போதைய அரச தலைவருக்கும் நாடாளுமன்றுக்கும் அறிவிக்காமல் இணக்கம் தெரிவித்தமை தேசத்துரோக செயற்பாடாகவே கருத வேண்டும்.
அந்தப் பிரேரணையில் உள்ளடக்கபட்ட விடயங்கள் அரசியலமைப்பிற்கு முரணானது. 2020ஆம் ஆண்டு இடம்பெற்ற மனித உரிமை கூட்டத்தொடரின் போது அந்தப் பிரேரணையில் இருந்து அரசாங்கம் உத்தியோகப்பூர்வமாக விலகியது.
இந்த நிலையில், பெப்ரவரியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது. எனினும், இலங்கை தொடர்பாக மனித உரிமை ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கை இலங்கையின் சுயாதீனத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் இம்முறை திருத்தியமைக்கப்படும். உள்ளக பிரச்சினையை சர்வதேச அரங்கிற்கு கொண்டு சென்று ஒரு தரப்பினர் இலாபமடைகிறார்கள். இதனால் சாதாரண தமிழ் மக்களுக்கு எவ்வித பயனும் கிடைக்கப் பெறவில்லை” என குறிப்பிட்டுள்ளார்
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.