இஸ்ரேல் இசை நிகழ்ச்சியில் விருந்தினராக பங்கேற்கும் பொப் நட்சத்திரம் மடோனா!
In உலகம் April 9, 2019 10:35 am GMT 0 Comments 1663 by : adminsrilanka
பொப் சுப்பர்ஸ்டார் மடோனா எதிர்வரும் மாதம் இஸ்ரேலில் நடைபெறவுள்ள யூரோவிஷன் பாடல் போட்டியின் போது சிறப்பு விருந்தினராக பங்கேற்று பாடி அசத்தவுள்ளார் என்று அவரது பிரதிநிதி நேற்று (திங்கட்கிழமை) தெரிவித்தார்.
இந்த பாடல் போட்டி நிகழ்ச்சி எதிர்வரும் மே மாதம் டெல் அவிவ்வில் மூன்று தினங்களுக்கு நடைபெறவுள்ளதுடன், மடோனா இரண்டு பிரபல பாடல்களையும் பாடவுள்ளார்.
இஸ்ரேல் மக்கள் அமைப்பும், அமெரிக்கா பாடகரின் பிரதிநிதியும் வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த போட்டி நிகழ்ச்சியில் சுமார் 40 நாடுகளைச் சேர்ந்த இசையமைப்பாளர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இஸ்ரேலின் உள்ளூர் பாடகர் நெட்டா பார்ஸில்லை நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த வருடம் போர்த்துக்கல்லில் இடம்பெற்ற போட்டியில் பார்ஸில்லை நட்சத்திர அந்தஸ்துடன் வெற்றிபெற்றார்.
இதன்போது முதல் இடத்தில் வெற்றி பெறும் நாடு அடுத்த வருடத்தின் இசை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பை பெறுகின்றது. குறித்த இசை நிகழ்ச்சி இடம்பெறும் பகுதிகள் புறக்கணிக்கப்பட வேண்டும் என்று ஏற்கனவே பாலஸ்தீன ஆதரவாளர்களால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இஸ்ரேல் அரசாங்கத்துடன் சர்வதேச நிறுவனங்கள், கலைஞர்கள் மற்றும் ஏனைய அரசாங்கங்கள் பங்களிப்பு வழங்கக் கூடாது என்று அவர்கள் கோரியிருந்தனர்.
கடந்த ஜனவரி மாதம் பாடகர்களான ரொஜர் வோட்டர்ஸ் மற்றும் பீட்டர் கேப்ரியல் உட்பட 50 கலைஞர்கள், இந்த வருடம் இடம்பெறவுள்ள யூரோவிஷன் போட்டிகளை இடம்மாற்ற கோரி சர்வதேச ஊடகங்களிடம் அறிக்கை விட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது..
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.