இஸ்ரேல்- சூடான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!

இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளதாக அரபு நாடான சூடான் அறிவித்துள்ளது. இந்த தகவலை அமெரிக்க தூதரகமும் உறுதி செய்துள்ளது.
சூடானை பயங்கரவாத ஆதரவு நாடுகள் பட்டியலில் இருந்து சமீபத்தில் அமெரிக்கா நீக்கியது. இந்த நடவடிக்கையை தொடர்ந்து இஸ்ரேலுடன் சூடான் அமைதி ஒப்பந்தம் (ஆபிரகாம் உடன்படிக்கை) செய்துகொண்டுள்ளது.
இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் செய்துகொண்டுள்ள சூடானுக்கு ஆண்டுக்கு 1 மில்லியன் டொலர்கள் நிதி வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. இது அமெரிக்க நிதித்துறை கருவூல தலைமை அதிகாரியின் சூடான் பயணத்தை தொடர்ந்து ஏற்பட்ட நிகழ்வாக உள்ளது.
இதுகுறித்து ஸ்டீவன் முனுச்சின் கூறுகையில், ‘இது மிகவும், மிக முக்கியமான ஒப்பந்தமாகும். கலாச்சார மற்றும் பொருளாதார வாய்ப்புகள் மற்றும் வர்த்தகம் ஆகியவற்றில் இஸ்ரேல் மக்கள் மற்றும் சூடான் மக்கள் தொடர்ந்து ஒன்றிணைந்து செயல்படுவதால் இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்’ என கூறினார்.
சூடானில் தற்போது 60 பில்லியன் டொலருக்கும் அதிகமான வெளிநாட்டுக் கடன் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.