இஸ்ரேல் தேர்தலில் எவருக்கும் பெரும்பான்மை இல்லை!
இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலின் தற்போதைய நிலைவரப்படி எவருக்கும் பெரும்பான்மையில்லையென தெரிவிக்கப்படுகிறது.
நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற இந்த தேர்தலில், தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு ஐந்தாவது தடவையாகவும் பிரதமர் பதவியை தக்கவைத்துக்கொள்ள போட்டியிட்டார். ஆனால், அவர் 33 தொடக்கம் 36 தொகுதிகளை கைப்பற்றுவார் என தெரிவிக்கப்படுகிறது.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஓய்வுபெற்ற இராணுவ ஜெனரல் பென்னி கான்ட்ஸ் 36 தொடக்கம் 37 வரையான தொகுதிகளை பெற்றுக்கொள்வாரென கூறப்படுகிறது.
இருவருமே தாங்கள் வெற்றிபெற்றதாக அறிவிக்கும் அதேவேளை, தற்போதைய பிரதமர் நெத்தன்யாகு மீண்டும் ஆட்சியமைக்கும் சாத்தியம் காணப்படுவதாக இரண்டு கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. கூட்டணி ஆட்சியே அமையும் என்றும் குறித்த கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.
எனினும், இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து ஓய்வுபெற்ற ஜெனரல் பென்னி ஆட்சியமைக்கும் சாத்தியம் காணப்படுவதாக மூன்றாவது கருத்துக்கணிப்பு கூறுகின்றது.
எவ்வாறெனினும், இரு தரப்பினருமே தேர்தல் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.
120 நாடாளுமன்ற ஆசனங்களைக்கொண்ட இஸ்ரேல் தேர்தலில் ஒவ்வொரு முறையும் பெரும்பான்மையை தக்கவைத்துக்கொள்ள கட்சிகள் தவறுகின்றன. இந்நிலையில், அங்கு பெரும்பாலும் கூட்டணி ஆட்சியே அமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.