இ.போ.ச. வட பிராந்தியத்தினரின் பகிஷ்கரிப்புப் போராட்டம் நிறைவு- அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

இ.போ.ச. வட பிராந்திய முகாமையாளராக நியமனம் வழங்கப்பட்ட குலபாலச்செல்வனின் நியமனம் தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிரதிநிதிகளின் உறுதிமொழியை அடுத்து போராட்டம் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
முன்னதாக வட பிராந்திய முகாமையாளராக அண்மையில் நியமனம் செய்யப்பட்டிருந்த குலபாலசிங்கம் இன்று (திங்கட்கிழமை) பதவியேற்கவிருந்த நிலையில் குறித்த நியமனத்தை இரத்துச் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இ.போ.ச. தொழிற்சங்கங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்திருந்தன.
அத்துடன், குறித்த விடயத்தை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்துக்கு வடபிராந்திய போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கப் பிரதிநிதிகள் கொண்டுசென்று தமக்கான நியாயத்தை பெற்றுத்தருமாறு வலியுறுத்தியிருந்தனர்.
இந்நிலையில், துறைசார் அமைச்சு அதிகாரிகளுடன் தொடர்புகளை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதற்கான தீர்வை சுமுகமாக வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, கந்தசாமி கமலேந்திரன் தலைமையிலான அமைச்சரது பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் கோண்டாவில் சாலைக்குச் சென்று போராட்டத்தை முன்னெடுத்த ஊழியர்களுடன் கலந்துரையாடியதுடன் அது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து தெரியப்படுத்தினர். இதையடுத்து வழங்கப்பட்ட உறுதிமொழியை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
பிரச்சினை,
சாவகச்சேரி மீசாலையைச் சேர்ந்த செல்லத்துரை குணபாலச்செல்வம், இலங்கை போக்குவரத்துச் சபையில் நீண்ட கால சேவை புரியும் அனுபவம்மிக்கவர்.
அத்துடன், கடந்த நல்லாட்சியில் அவர் யாழ்ப்பாணம் சாலை முகாமையாளர் பதவியிலிருந்து கொழும்புக்கு மாற்றப்பட்டார். மும்மொழித் திறமையுடைய அவர், கடந்த காலங்களில் பல ஊழியர்களின் பதவிநிலைப் பிரச்சினைகளைச் சீர்செய்து வழங்கியிருந்தார்.
இந்நிலையில், செல்லத்துரை குணபாலச்செல்வத்திற்கு, வடபிராந்திய பிரதான முகாமையாளராக நேற்றுமுன்தினம் நியமனம் வழங்கப்பட்டது. அத்துடன் அவருக்கான உரிய நியமனக் கடிதத்தை கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கிவைத்திருந்தார்.
இதையடுத்து, அவரது பதவி இடைநிறுத்தப்பட்டதை எதிர்த்து வட பிராந்தியத்தின் ஏழு சாலைகளினதும் தொழிற்சங்கள் நேற்றுக் காலை கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நேரில் சந்தித்து குணபாலச்செல்வத்தின் நியமனத்தை உறுதி செய்யுமாறு வலியுறுத்தினர்.
அத்துடன், அவரது நியமனத்தை நிறுத்தினால் வட பிராந்தியத்தின் ஏழு சாலைகளும் ஒன்றிணைந்து தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்போவதாக தெரிவித்திருந்தனர். எனினும், நியமனம் நிறுத்தப்படாது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.