ஈழத்துச் திருச்செந்தூரில் சிறப்பாக நடைபெற்றது பட்டிப்பொங்கல்!

தமிழர்களின் தைப்பொங்கல் திருநாளை அடுத்துவரும் பட்டிப்பொங்கல் நாளான இன்று பசுக்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.
ஈழத்துச் திருச்செந்தூர் எனப்போற்றப்படும் மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் உள்ள மாட்டுப் பட்டியில் இன்று (வெள்ளிக்கிழமை) பட்டிப்பொங்கல் விழா சிறப்பா நடைபெற்றது.
‘குலங்காக்கும் பசுவை காப்போம் என்னும் தொனிப்பொருளில் இன்று பட்டிப்பொங்கல் விழா சிறப்பாக நடத்தப்பட்டது. இதன்போது பசுக்களுக்கு சந்தனம், குங்கும் அணிவிக்கப்பட்டு பக்தி பூர்வமாக பூசைகள் நடத்தப்பட்டன.
இயற்கையையும் தொழிலையும் மதித்து வணக்கும் தமிழர் திருநாளே தைப்பொங்கல் ஆகும். உழவுத் தொழிலில் உழவனுக்கு உறுதுணையாய் இருக்கும் எருதுகளுக்கு பொங்கல் இட்டு மரியாதை செய்யும் பட்டிப் பொங்கல் இன்றாகும்.
தமிர்களின் பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் எடுத்துரைக்கும் தைத்திருநாள் இரண்டாம் நாள் நிகழ்வான பட்டிப்பொங்கல் காலம் காலமாக முக்கியத்துவம் பெறும் கால்நடைகளுக்கான பண்டிகை ஆகும்.
மக்களின் வாழ்வில் ஒன்றிய பசுவுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், பசுக்களில் எல்லாத் தேவர்களும் இருப்பதாலும் பசுக்களை வணங்கி வழிபடும் நாளாக பட்டிப்பொங்கல் திகழ்கின்றது.
தொழுவத்திலேயே பொங்கல் பொங்கி கற்பூர தீபாராதனை காட்டப்படும். இதன் பின்னர் பசு, காளை, எருமை என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழம் கொடுக்கப்படும்.
உழைப்பில் உதவும் உயிரினத்துக்கு நன்றி செலுத்தவும் பசுச் செல்வங்களை நேசிக்கும் மரியாதை செய்யும் மனித மாண்பையும் பட்டிப்பொங்கல் வெளிப்படுத்துகின்றது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.