ஈஸ்டர் தாக்குதலின் வலிகளை சுமந்தவாறே மக்கள் கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடுகிறார்கள் – ஜனாதிபதி
In ஆசிரியர் தெரிவு December 25, 2020 3:01 am GMT 0 Comments 1465 by : Dhackshala
ஈஸ்டர் தாக்குதலின் கடுமையான வலிகளை சுமந்தவாறே இந்த நாட்டின் கிறிஸ்தவ மக்கள் கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடுகிறார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
உலகெங்கிலும் உள்ள கோடிக் கணக்கான கிறிஸ்தவர்களின் உள்ளங்களில் இறைவன் மீதான பக்தியுணர்வை தூண்டும் இயேசு கிறிஸ்துவின் பிறப்புடன் தொடர்புடைய கிறிஸ்மஸ் பண்டிகையானது உயிர்ப்பு விழாவுக்கு அடுத்ததான உன்னதமான சமயப் பண்டிகையாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு அவர் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இயேசு நாதர் போதித்த மற்றும் நடைமுறையில் வாழ்ந்துகாட்டிய அமைதி, அன்பு, இரக்கம், சகவாழ்வு, கருணை போன்ற பண்பட்ட மனித சமூகத்தின் அடித்தளத்தை வடிவமைக்கும் உன்னத பெறுமானங்களை உள்ளடக்குகிறது.
கிறிஸ்மஸ் பண்டிகை சமூக ரீதியாக, கிறிஸ்தவ குடும்பங்கள் ஒன்றுகூடுவதற்கும் பரிசுகளை பரிமாறிக்கொள்வதற்கும் பகைமைகளை மறந்து பிணைப்பினை புதுப்பிப்பதற்குமான ஒரு மகிழ்ச்சியான சந்தர்ப்பமாகும்.
கொவிட் -19 தொற்றுநோய் நிலைமைகளுக்கு மத்தியில் பொருளாதார, சமூக மற்றும் கலாசார ரீதியாக செயலற்றிருக்கும் உலகை மீண்டும் எழுச்சி பெறச்செய்ய இவ்வாறான நன்நெறிகளை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
ஒரு வருடத்திற்கும் முன்னர் ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலின் கடுமையான வலிகளை சுமந்தவாறே இந்த நாட்டின் கிறிஸ்தவ மக்கள் நத்தார் பண்டிகையை கொண்டாடுகிறார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது.
ஆயினும்கூட, அந்த அச்சங்களையும் பாதுகாப்பற்ற தன்மையையும் அகற்றுவதற்கும் அச்சம், சந்தேகம் இல்லாமல் அனைவரும் சமயக் கிரியைகளில் ஈடுபடுவதற்கான சூழலை உருவாக்குவதற்கும் எமக்கு முடிந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியும் அவ்வாறே வழங்கப்படும்” எனவும் ஜனாதிபதி தமது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.