உக்ரேனை ஆளப்போவது தொழிலதிபரா நடிகரா?

உக்ரேனின் அடுத்த ஜனாதிபதியை தெரிவுசெய்யும் இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது.
அந்நாட்டு நேரப்படி காலை 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இத்தேர்தல், 12 மணித்தியாலங்களுக்கு பின்னர் நிறைவடையும்.
இரண்டு கட்டங்களாக நடைபெறும் இத்தேர்தலில் 39 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். அவர்களில் தற்போதைய ஜனாதிபதி பெட்ரோ பொரஷென்கோவிற்கும் (வயது-53) நகைச்சுவை நடிகர் வொலோடிமிர் ஜெலன்ஸ்கிக்கும் (வயது-41) இடையில் கடும் போட்டி நிலவுகின்றது.
பிரபல தொழிலதிபரான பெட்ரோ பொரஷென்கோவிற்கு, அரசியலுக்குள் புதிதாக நுழைந்த நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி கடும் சவாலை கொடுத்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 31ஆம் திகதி நடைபெற்ற முதற்கட்ட வாக்கெடுப்பில் பொரஷென்கோவை விட ஜெலன்ஸ்கி முன்னிலையில் உள்ளார். இந்நிலையில் இன்று நடைபெறும் தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
இன்றைய தேர்தலில் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படுபவர் எதிர்வரும் 5 வருடங்களுக்கு உக்ரேனை ஆட்சி செய்வார்.
இதேவேளை, கடந்த வெள்ளிக்கிழமை தலைநபர் கிவ்-இல் அமைந்துள்ள ஒலிம்பிக் அரங்கில் ஜெலன்ஸ்கி மற்றும் பொரஷென்கோவிற்கு இடையில் முதலாவது நேரடி விவாதம் இடம்பெற்றது. இதற்காக இலவச டிக்கட்டுக்களை ஜெலன்ஸ்கி வழங்கியதாகவும், அவர் தேர்தலில் போட்டியிடுவதை தடைசெய்ய வேண்டும் என்றும் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனினும், அதனை நீதிமன்றம் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.