உடல்களை அடக்கம் செய்யும் முஸ்லிம்களின் உரிமையில் அரசியல் செய்ய வேண்டாம்- ராகுல தேரர்
In இலங்கை November 16, 2020 4:24 am GMT 0 Comments 1671 by : Yuganthini

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்யும் உரிமையைப் பெற்றுக் கொடுங்கள் என பகவந்தலாவ ராகுல தேரர் தெரிவித்தார்.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டலின் கீழ் அடக்கம் செய்வதற்கு ஜனாதிபதி ஆவனசெய்ய வேண்டுமெனவும் அவர் வலியுறுத்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக ராகுல தேரர் மேலும் கூறியுள்ளதாவது, “சடலங்களை வைத்துக் கொண்டு அரசியல் செய்வதற்கு இடமளிக்க வேண்டாம். இஸ்லாமியர்களின் மனதை காயப்படுத்தி, அவர்களை கோபத்துக்குள்ளாக்காதீர்கள். அது எமக்குப்பாவம்.
இஸ்லாமியர் ஒருவர் மரணித்து விட்டால் அவரது உடலை என்ன செய்ய வேண்டும் என அம்மதத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
இப்போது நாட்டில் புதிய கதையொன்று ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. அது – இறந்தவர்களின் உடலை எரிப்பதா? அடக்கம் செய்வதா? என்பதாகும். ஆனால், இறந்தவர்களின் உடலை எரிப்பது பாவமென்று இஸ்லாமிய தர்மம் கூறியுள்ளது. இறந்தவர்களின் உடலுக்கு மரியாதை செய்ய வேண்டும்.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் இறந்த ஜனாஸாக்களை வைத்துக் கொண்டு அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். கவலையாக இருக்கிறது. இயற்கையும், பிரபஞ்சமும் இதையா எதிர்பார்க்கிறது? எங்களை விட உயர்ந்த நாடுகளில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
அமெரிக்கா, கனடா, இத்தாலி, சிங்கப்பூர் போன்ற பல நாடுகளில் சடலங்கள் எரிக்கப்படவில்லை. சுகாதாரத்துறை என்ன கூறுகிறதோ அதை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஏன் இலங்கை நாட்டில் மாத்திரம் தகனம் செய்து கொண்டிருக்கிறார்கள்?
இந்நாட்டின் தலைவர்களே இவ்விவகாரம் தொடர்பில் சரியான ஒரு பதிலை இந்நாட்டு மக்களுக்கு வழங்குங்கள். என்ன நடைமுறை என இலங்கை அரசாங்கம் சரியான சட்டமொன்றினை நடைமுறைப்படுத்த வேண்டும். இல்லையேல் ஜனாதிபதி மக்களின் மனதை ஆறுதல்படுத்தும் வகையில் வார்த்தையொன்றினைக் கூறவேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.