உண்மையான சுதந்திரத்தைப் பெற்றுள்ளோமா?
In ஆசிரியர் தெரிவு February 4, 2019 9:49 am GMT 0 Comments 7248 by : Varshini
”வீர சுதந்திரம் வேண்டிநின்றார் பின்னர் வேறொன்று கொள்வாரோ?’
–மகாகவி பாரதியார்-
அந்நியப் படைகளின் ஆக்கிரமிப்பிலிருந்து விடுதலையான இலங்கை 1948ஆம் சுதந்திரம் பெற்றது. இலங்கைத் தீவில் வாழும் மக்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்கின்றார்களா?
ஒரு மனிதனின் சுதந்திரம் எந்தவிடயத்தில் தங்கியுள்ளது என்பதுபற்றி நாம் சிந்திக்கவேண்டும். தாம் பிறந்த மண்ணை தாய்நாடாக ஏற்றுக்கொள்ளும் மனிதன், அந்த மண்ணில் வாழும் சுதந்திரத்தைப் பெற்றவனாக இருக்கவேண்டும். அந்த வாழ்க்கை, சுதந்திர சிந்தனை கொண்டதாக இருக்கவேண்டும். அந்தச் சிந்தனையை செயற்படுத்தும் உரிமையைக் கொண்டவனாக வேண்டும். உரிமையோடு வாழும் உரித்தை கொண்டவனாக இருத்தல் வேண்டும்.
பொருளாதார, அரசியல் ரீதியான உரிமைகள் இவற்றில் முக்கியமானவை. அவை கிடைக்காதபோது, அங்கு போராட்டங்களும் கிளர்ச்சிகளும் ஏற்பட்டமை நாம் கண்ட வரலாறு.
இவற்றினை நோக்கும்போது, எங்கே சுதந்திரம் என்ற கேள்வி எம்மிடம் எழுகின்றது. நாடு சுதந்திரம் பெற்றாலும், மக்கள் சுதந்திர உணர்வை அனுபவிக்கின்றார்களா?
குறிப்பாக மூன்று தசாப்தகால போராட்டத்தின்போது, தமிழ் மக்களின் உணர்வுகள் மழுங்கடிக்கப்பட்டன. நாட்டில் இடம்பெற்ற யுத்தம் எல்லாவற்றிற்குமே தடையாக அமைந்தது.
யுத்தம் நிறைவடைந்த பின்னர் மக்களின் வாழ்க்கையில் தன்னிறைவு ஏற்படுத்தப்படவில்லை என்பதே இன்று காணப்படும் பிரச்சினை.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, மக்கள் இன்னும் தமது சொந்த இடங்களுக்குச் செல்லமுடியாதநிலை, கௌரவமாக வாழும் சூழல் மற்றும் தமக்கான அரசியல் தீர்வு என்பன கிடைக்காத நிலையில், இதனை உண்மையான சுதந்திர தினமாக ஏற்றுக்கொள்ள முடியாதென இன்றைய நாளில் தமிழர் தாயம் போராட்டங்களால் நிறைந்துள்ளது.
மறுபுறம் தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினை. 1000 ரூபாய்க்காக அல்லலுற்ற அம்மக்கள், இறுதியில் ஏமாற்றத்தைத் தழுவியுள்ளனர். சம்பளப் பிரச்சினை, வீட்டுத்திட்டம், உரிய கல்வி மற்றும் சுகாதார வசதிகள் கிடைக்காமை என இன்றைய நாளில் அம்மக்களும் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
மக்கள் பொருளாதார ரீதியில் நலிவுற்றுக் காணப்படுவதை ஆங்காங்கே தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் போராட்டங்கள் பறைசாற்றி நிற்கின்றன.
பொருளாதார ரீதியில் தன்னிறைவை பெறுவது சுதந்திரத்தின் முக்கிய அம்சம் என்ற கோட்பாடும் காணப்படுகிறது. ஆனால், எமது நாடு பொருளாதார ரீதியில் இன்னொரு நாட்டில் தங்கியிருக்க வேண்டியுள்ளது.
இதனால் கடன்பொறிக்குள் சிக்குண்டு வெளிவரமுடியாமல், அதன் பிரதிபலிப்பாக பொருட்களின் விலையேற்றம், ஊதியப் பிரச்சினை என போராட்டத்திற்கு மத்தியில் வாழ்க்கை நகர்கின்றது. இவ்வாறு காணப்படும்போது, சுதந்திரதினக் கொண்டாட்டம் அர்த்தமுடையதாய் அமைகின்றதா என்பதை நாம் ஒவ்வொருவரும் எமக்குள் கேட்டுக்கொள்வோம்.
கலாவர்ஷ்னி கனகரட்ணம்
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.