உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படும் – அரசாங்கம்!
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவை ஸ்தாபிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என இராஜாங்க அமைச்சர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ‘காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பா அலுவலகம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளமை பிழையான நடவடிக்கையா என நான் இங்கு கேட்க விரும்புகிறேன்.
இன, மத, மொழி பேதங்கள் கடந்து தான் இந்த அலுவலகம் இயங்குகிறது. காணாமல் போயுள்ள அனைத்து பிரஜைகள் தொடர்பிலும்தான் இந்த அலுவலகம் செயற்பட்டு வருகிறது.
தமிழ் மக்கள் மட்டுமன்றி, சிங்கள மக்களும் தான் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள். நாம், இதுவிடயத்தில் விவாதங்களை நடத்திப் பயனில்லை.
இதற்கு, எமது இரண்டு பிரதானக் கட்சிகளும்தான் பொறுப்புக் கூற வேண்டும். இதனால்தான் காணாமற்போனோர் தொடர்பான அலுவலகத்தை நாம் ஸ்தாபித்தோம்.
அதேபோல், இழப்பீடு வழங்கும் அலுவலகம் ஒன்றையும் கொண்டுவந்தோம். இதற்கும் சிலர் எதிர்ப்பினை வெளியிட்டு வருகிறார்கள்.
நாடாளுமன்ற அனுமதியுடன், அரசமைப்புக்கு உட்பட்டே இந்த இழப்பீடு அலுவலகத்தை நாம் ஸ்தாபித்தோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளையும், உரிமைகளையும் வழங்கும்பொறுட்டே இது கொண்டுவரப்பட்டது.
இது நாட்டுக்கான ஆபத்தாக கூறமுடியாது. இது நாட்டுக்கு அத்தியாவசியமாகும். அதேபோல், உண்மைகளை கண்டறியும் ஆணைக்குழுவும் விரைவில் ஸ்தாபிக்கப்படும் என்பதையும் இங்குக் கூறிக்கொள்கின்றேன்.
ஜெனீவாத் தீர்மானம் தொடர்பாகவும் திரிபுப்படுத்தப்பட்ட கருத்துக்கள் தான் கூறப்படுகிறது. தேவையில்லாத பிரச்சினைகளை நாட்டில் ஏற்படுத்தவே இவ்வாறான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
நாம், வெள்ளைக் காரர்களுக்கு இனங்கும் அரசாங்கம் இல்லை. ஆனால், மத்தியஸ்தலமாக செயற்பட வேண்டும் என்பதுதான் எமது நோக்கமாகும்’ என தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.