உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்த 62 பேரின் உடல்கள் இதுவரை கண்டெடுப்பு
In இந்தியா February 20, 2021 11:06 am GMT 0 Comments 1145 by : Yuganthini

உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்த 62பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
உத்தரகாண்டின் சமோலி மாவட்டத்தின் ஜோஷிடம் அருகே நந்தாதேவி பனிப்பாறையின் ஒரு பகுதி, கடந்த 7ஆம் திகதி திடீரென உடைந்ததால், பெரும் பனிச்சரிவும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது.
இதில் அங்கு அமைக்கப்பட்டிருந்த ரிஷிகங்கா நீர்மின் நிலையம் முற்றிலுமாக அடித்துச்செல்லப்பட்டது. மேலும் தபோவன்-விஷ்ணுகாட் அனல்மின் நிலைய சுரங்கங்கள் சேதமடைந்தன. இதனால் அங்கு பணியாற்றி வந்த நூற்றுக்கு மேற்பட்ட ஊழியர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதுடன், சுரங்கங்களிலும் சிக்கிக்கொண்டனர்.
இந்த பேரிடரில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளை இராணுவம், தேசிய-மாநில பேரிடர் மீட்புப்படை என மிகப்பெரும் மீட்புக்குழுவினர் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக இரவு-பகலாக மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் உயிருடன் இருந்தவர்கள் ஏற்கனவே மீட்கப்பட்டு விட்ட நிலையில், தற்போது உயிரிழந்தவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் இன்று உத்தரகாண்ட் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், பனிப்பாறை உடைந்ததால் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் சிக்கியவர்களில் இதுவரை மொத்தம் 62 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இவற்றில் 34 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 28 உடல்கள் இன்னும் அடையாளம் கண்டறியப்படவில்லை. இன்னும் மாயமான 142-பேரை காணவில்லை. வெள்ளத்தில் சிக்கி காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது” என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.