உலகளவில் தமிழர் பண்பாடு சிறப்புடையது – கோவையில் மோடி உரை

உலகளவில் தமிழர் பண்பாடு சிறப்புடையது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
கோவையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பா.ஜ.க. வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரித்து பிரதமர் மோடி இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை உரையாற்றினார்.
இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பா.ஜ.க. பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
அப்போது அவர் பேசியதாவது, “வணக்கம், சகோதர சகோதரிகளே, தமிழக மக்களுக்கு வணக்கம், மருதமலை முருகனுக்கு அரோகரா.
உலகளவில் தமிழர் பண்பாடு சிறப்புடையது. தமிழ் கலாசாரம், மொழி தனித்துவம் வாய்ந்தது, சிறப்பானது.
அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன் புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் , ஜெயலலிதா அம்மாவை நினைவு கூருகின்றேன்.
பாதுகாப்பான நாட்டை உருவாக்குவதில் தமிழகத்தின் பங்கு முக்கியமானது. உலகளவில் தமிழர் பண்பாடு பிரசித்தி பெற்றது. நிலையான ஆட்சி அமைய வேண்டும் என தேசிய ஜனநாயக கூட்டணி விரும்புகிறது. 21ஆம் நூற்றாண்டில் இந்தியா எப்படி இருக்கும் என்பதை காட்டப்போகும் தேர்தல் இது.
தேசிய பாதுகாப்பு தொடர்பாக எதிர்க் கட்சிகளிடம் எந்த திட்டமும் இல்லை. நாட்டின் பாதுகாப்பில் சமரசம் செய்துகொள்ளாமல் உறுதியாக இருக்கிறோம். நம் நாட்டின் மீது தாக்குதல் நடத்தினால் வட்டியும் முதலுமாக திரும்பத்தரப்படும்” என்று அவர் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.