உலகிற்கு முன்னுதாரணம் வகித்த “எதிரிகள்”
In சிறப்புக் கட்டுரைகள் June 15, 2018 7:18 am GMT 0 Comments 4068 by : Arun Arokianathan
நாள்தோறும் உலகில் மனிதம் சிதைந்து நம்பிக்கைகள் அற்றுச் சென்றுகொண்டிருக்கின்றதே என கவலைகொண்டிருந்த மக்களுக்கு சற்றே நம்பிக்கையளிப்பதான நிகழ்வு சில நாட்களுக்கு முன்னர் நடந்தேறியுள்ளது.
ஆம், முழு உலகையும் ஒரே திசையில் திரும்பிப் பார்க்க வைத்த பேரதிசயச் சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை சிங்கப்பூரில் இடம்பெற்றுள்ளது. கனவில் கூட சாதகமாக முடியாது எனப் பேசப்பட்ட நிகழ்வு திடீரென யதார்த்தமாகி, நனவாகியுள்ளது. வட கொரியத் தலைவர் கிம் யொங் உன்னும் அமெரிக்கத் தலைவர் டொனால்ட் ட்ரம்பும் சிங்கப்பூரில் சந்தித்து எடுத்திருக்கும் தீர்க்கமான தீர்மானமும், இணைவும் உலகினை பேரழிவிலிருந்து மீட்டெடுத்திருப்பதாகவே நோக்க முடிகிறது. யாராலும் நம்ப முடியாததொரு விடயம் நடந்துள்ளது. மூன்றாம் உலகப் போர் எந்த நேரத்திலும் நடக்கலாமென உலகம் அஞ்சிக் கொண்டிருந்த நிலையில் இத்திடீர் அதிசயம் நிகழ்ந்துள்ளது.மரணத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த உலகம் உயிர் பிழைத்துள்ளது.
அணு ஆயுதப் பேரழிவுகளை முற்றாகத் தவிர்ப்பதற்கு வட கொரியாவும், அமெரிக்காவும் மனமிசைந்து தீர்மானம் பிரகடனப்படுத்தியுள்ளமை உண்மையிலேயே உலகம் மீள்பிறப்பெடுத்ததொன்றாகவே நோக்க வேண்டியுள்ளது. இந்த விடயத்தில் பாரிய விட்டுக்கொடுப்பைச் செய்திருப்பவர் வட கொரியத் தலைவர் கிம் யொங்- உன் ஆவார். இப்படியானதொரு திருப்புமுனைக்கு வழிகோலியது யார்? கிம் யொங் உன்னின் மனமாற்றம் எதனால் ஏற்பட்டது என்பது குறித்து எவராலும் ஊகிக்க முடியாத நிலையே காணப்படுகின்றது. அவரின் இந்த திடீர் முடிவால் அதிர்ந்து போயுள்ள டொனால்ட் ரம்ப், இந்த நிகழ்வினை வரலாற்று முக்கியத்துவமாகக் கருதுவதாகவும். இதன் மூலம் நிச்சயமாக உலகம் அமைதியடையும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த இருதலைவர்களதும் சந்திப்பே மிகப் பெரிய விடயம்தான். என்றுமே இவ்வாறானதொரு சந்திப்பு நடக்காது என்பதே உலகம் போட்ட கணக்காகும். அந்தக் கணக்கு இன்று பிழைத்து விட்டது. இந்தச் சந்திப்பு உலகுக்குப் பல்வேறுபட்ட செய்திகளை எடுத்துரைக்கின்றது. இரண்டு தலைவர்களும் தொடர்ந்து அறிக்கை யுத்தங்களை நடத்திக் கொண்டிருந்த நிலையில் அதனை மூன்றாம் உலகப் போருக்கான அறைகூவல் என்றே உலகம் பார்த்தது. அப்படியொரு யுத்தம் வெடித்திருந்தால் அது உலக அழிவுக்கே காரணமாக அமைந்து விடும் தன்மையையே காண முடிந்தது.
அப்படியான எந்தவிதமான விபரீதங்களுமின்றி செவ்வாயன்று புதுயுகம் மலரும் விதத்தில் எதிரும்புதிருமான தலைவர்கள் அரவணைத்துக் கொண்டனர். யாரும் நம்பி விட முடியாதது. ஆனால் நம்பும் விதத்தில் நடந்து விட்டது. இரு தலைவர்களும் தமது சந்திப்பின் போது இணைந்து கைச்சாத்திட்டுள்ள ஆவணத்தில் பெரிய மாற்றங்கள் காணப்படாத போதிலும் உலகுக்கு நம்பிக்கையூட்டும் செய்தியை அது கொண்டிருப்பதாக வெளிப்படையாகவே பேசப்படுகின்றது.
இரு தலைவர்களும் இணைப்பின் மூலம் வெளியிடப்பட்டிருக்கும் ஆவணத்தில் நான்கு பிரதான அம்சங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. இரு நாடுகளும் விரும்பும் சமாதானத்தையும் செழிப்பையும் ஏற்படுத்த இருநாடுகளும் இணைந்து புதிய உறவுக்கான அர்ப்பணிப்பு, கொரிய தீபகற்பத்தில் அமைதியை நிலைநாட்டி நிலையான ஆட்சிக்கு இரு நாடுகளும் பணியாற்றல், வடகொரிய தலைவரும் தென் கொரிய பிரதமரும் ஏப்ரல் மாதத்தில் எட்டிய இணக்கப்பாடுகளை மீள வலியுறுத்தி அணுவாயுத அழிப்புக்கு ஒத்துழைத்தல், போர்க் கைதிகளையும் ஏனையோரையும் விடுவிப்பதற்கு இரு நாடுகளும் நடவடிக்கை எடுத்தல் ஆகிய நான்கு பிரதான அம்சங்கள் உள்வாங்கப்பட்டுள்ளன.
இத்தகைய புரிந்துணர்வொன்றினூடாக உலகம் அமைதி, ஸ்திரத்தன்மை நோக்கி நகர்வதையே வெளிக்காட்டி நிற்கின்றது. உலகம் அமெரிக்காவை சர்வதேச பொலிஸ்காரன் என்றே வர்ணித்து வருகின்றது. அமெரிக்காவின் போக்கு நாட்டுக்கு நாடு வித்தியாசப்படலாம். அதுவும் டொனால்ட் ட்ரம்பைப் பொறுத்தவரையில் உலகளாவிய மட்டத்தில் ஒரு முரண் மனிதனாகவே பார்க்கப்படுகிறார். அதேசமயம் அமெரிக்கா இராஜதந்திர நகர்வுகளினூடாக தன்னை நிலைநிறுத்தும் கைங்கரியத்தையே எப்போதும் மேற்கொண்டு வந்துள்ளது.
இவ்வாறான நிலையில் வடகொரியாவுடன் முட்டி மோதிக் கொண்டிருப்பதன் மூலம் தனது இராஜதந்திர நகர்வுக்குப் பாதகம் ஏற்படக் கூடும் என்ற சங்கடத்தில் காரணமாகவே இணைந்து போகும் நிலைக்கு ட்ரம்ப் இறங்கி வந்துள்ளார் என்பதை மறுக்க முடியாது.
இத்தகைய புதிய நகர்வுகளைப் பார்க்கின்ற போது பேச்சுவார்த்தை ஒன்றினூடாக உலக சமாதானத்தை நிலைநாட்ட முடியும் என்ற யதார்த்தத்தை இவர்கள் உலகறியச் செய்திருக்கின்றனர். ஒப்பந்தங்கள். ஆவணங்களாக இருப்பதிலும் பார்க்க மனிதாபிமானம் மிக்கதாகவும், புரிந்துணர்வுக்குட்பட்டதாகவும் அமைவதன் மூலம் வெற்றி இலக்கை நோக்கி பயணிக்க முடியும். இந்த விடயத்தில் தோல்வி என்பது எவருக்குமே கிடைக்கக் கூடாது. அனைவரும் வெற்றியாளர்களாக மாற வேண்டும். இது தான் மனிதாபிமானமாகும்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.