உலகில் முதன்முறையாக பறவைக் காய்ச்சல் வைரஸ் (H5N8) மனிதனுக்குப் பரவியது- ரஷ்யா அறிவிப்பு!

உலகில் முதன்முறையாக பறவைக் காய்ச்சல் வைரஸ் மனிதனுக்குப் பரவிய வழக்கு தெற்கு ரஷ்யாவில் பதிவாகியுள்ளது.
இந்நிலையில், இந்த வைரஸ் பரவல் குறித்து உலக சுகாதார அமைப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ரஷ்யாவின் சுகாதார நுகர்வோர் கண்காணிப்புக் குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
H5N8 ஏவியன் இன்ஃப்ளூவன்ஸா (H5N8 Avian Influenza) என்ற வைரசே மனிதர்களிடத்தில் கண்டறியப்பட்டுள்ள நிலையில் இது, இன்னும் மக்களிடையே பரவவில்லை என ரஷ்யா குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், தெற்கு ரஷ்யாவில் உள்ள கோழி பண்ணையொன்றில் ஏழு பண்ணைத் தொழிலாளர்களுக்கு இந்த வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டதாகவும், இதுகுறித்த தகவல்களை உலக சுகாதார அமைப்புக்கு அதிகாரிகள் அனுப்பியுள்ளதாகவும் ரஷ்யாவின் பொது சுகாதாரத் தலைவர் அன்னா பொபோவா (Anna Popova) இன்று (சனிக்கிழமை) தொலைக்காட்சி ஊடகமொன்றில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த வைரஸ் மனிதர்களுக்கு இடையே பரவுவதில்லை எனவும் ஆனால், எதிர்காலப் பிறழ்வுகள் எவ்வாறான பரவல் நிலையைக் கொண்டிருக்கும் என்று கூறமுடியாது எனவும் அன்னா பொபோவா கூறியுள்ளார்.
இந்நிலையில், இந்த முன்னறிவிப்பானது முழு உலகிற்கும் எச்சரிக்கையையும் அதனை எதிர்கொள்வதற்கான திட்டமிடல் மற்றும் சரியான நேரத்தில் தடுப்பூசிகளைத் தயாரிப்பதற்கான காலத்தையும் தந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
கடந்த டிசம்பரில் குறித்த கோழிப் பண்ணையில் பறவைகள் மத்தியில் இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதாக கோழிப்பண்ணை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, உலக சுகாதார அமைப்பின் அறிவிப்புப்படி, “A (H5) வைரஸ்கள் கொண்ட மனித நோய்த்தொற்றுகள் அரிதானவை மற்றும் பொதுவாக நோய்வாய்ப்பட்ட மனிதர்களுக்கு இது ஏற்படுகின்றன என்றாலும், அவை மனிதர்களில் கடுமையான நோய் அல்லது மரணத்திற்கு வழிவகுக்கும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், 2014ஆம் ஆண்டு முதல் மனிதர்களில் H5N6 என்ற பறவை காய்ச்சல் பாதிப்புக்குள்ளான 14 வழக்குகளில் ஆறு அபாயகரமானவை என WHO நவம்பர் 2016 திகதியிட்ட ஒரு பதிவில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.