உலக உணவுப் பாதுகாப்பின் நிலை 2021ஆம் ஆண்டு மிகவும் மோசமாகும்: உலக உணவு அமைப்பு

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் காரணமாக, உலக உணவுப் பாதுகாப்பின் நிலை இந்த ஆண்டைவிட எதிர்வரும் 2021ஆம் ஆண்டு மிகவும் மோசமானதாக இருக்கும் என்று ஐ.நா. உணவு நிவாரணப் பிரிவான உலக உணவு அமைப்பு எச்சரித்துள்ளது.
நடப்பாண்டின் அமைதிக்கான நோபல் பரிசை வென்றுள்ள அந்த அமைப்பின் தலைவர் டேவிட் பியஸ்லி கூறுகையில், “கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவல் காரணமாக, உலகின் பல்வேறு பகுதிகளில் மிகக் கடுமையான உணவுப் பஞ்சம் ஏற்படும் என்று நான் ஏற்கெனவே எச்சரித்திருந்தேன். அந்த எச்சரிக்கையை ஏற்று, உலகத் தலைவர்கள் பல்வேறு உதவிகளை அளித்தனர். நிதியுதவி, ஊக்க திட்டங்கள், கடன் வசூல் நிறுத்திவைப்பு போன்ற சலுகைகளை அவர்கள் அளித்தனர்.
அதன் பலனாக, இந்த ஆண்டு எதிர்நோக்கியிருந்த மிகக் கடுமையான உணவுப் பஞ்சம் தவிர்க்கப்பட்டது. ஆனால், தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவல் தீவிரமடைந்து வருகிறது. பல நாடுகள் மீண்டும் பொதுமுடக்கங்களை அறிவித்து வருகின்றன. நாடுகளின் பொருளாதாரத்தை கொரோனா வைரஸ் நெருக்கடி தொடர்ந்து பாழ்படுத்தி வருகிறது.
இந்தச் சூழலில், 2020ஆம் ஆண்டு எங்களுக்குக் கிடைத்த அதே நிதியுதவி அடுத்த ஆண்டு கிடைக்காமல் போகும். இதன் காரணமாக, இந்த ஆண்டைவிட அடுத்த ஆண்டு உணவுப் பஞ்சம் மிக மோசமானதாக இருக்கும்.
உலக நாடுகளின் தலைவர்கள் உரிய நிதியுதவியை வழங்காவிட்டால், இந்தச் சூழலைத் தவிர்க்க முடியாது. இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு எங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது, உணவுப் பஞ்சத்தைத் தணிக்கும் எங்களது முயற்சிகளுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் நெருக்கடியால் உலகம் எதிர்நோக்கியுள்ள உணவு பஞ்சம் குறித்து உலகத் தலைவர்களை எச்சரிக்க, இந்த நோபல் பரிசு எங்களுக்கு பக்கபலமாக இருக்கிறது” என கூறினார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.