உளுந்து உற்பத்தியாளர்களுக்கு கமக்காரர் சம்மேளனத்தின் அறிவுறுத்தல்!
In இலங்கை February 24, 2021 5:31 am GMT 0 Comments 1159 by : Vithushagan

உளுந்து இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் உளுந்து செய்கையாளர்கள் தமது உற்பத்திகளை உடன் சந்தைப்படுத்துமாறு வவுனியா மாவட்ட கமக்காரர் ஒழுங்கமைப்புக்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கை அரசாங்கம் உளுந்தின் கேள்வியைக் கருத்திற்கொண்டு இறக்குமதி செய்வதற்கான அனுமதியை இறக்குமதியாளர்களுக்கு வழங்கியுள்ளது.
இறக்குமதியாளர்களினால் விதியோகிக்கக் கூடிய உச்ச விலையானது 640/- வரை இருக்கலாமென அறியப்படுகின்றது. இதன் அடிப்படையில் எதிர்காலத்தில் உளுந்தின் சில்லறை விலை 750-800/- ரூபாய்க்கு இடைப்பட்டதாகவே இருக்கும். எனவே உளுந்தை சந்தைக்கு விடாது அதிக விலைக்கு விற்க காத்திருக்கும் விவசாயிகள் எதிர்காலத்தில் நட்டமடையக் கூடிய வாய்ப்புகள் உண்டு.
இதேவேளை விதை உளுந்துச் செய்கைக்காக விதையினை விதைகள் உற்பத்தித் திணைக்களத்தில் பெற்ற விவசாயிகள் மீள விதை உளுந்தை தரத்தின் அடிப்படையில் 870 – 920 /- விற்கு குறித்த திணைக்களத்திற்கு விற்க இயலும்.
இதுவரை விதை உளுந்திற்கான தேவையின் 1/3 கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் விதை உளுந்துகளை மீளச் செலுத்தாதவர்களுக்கான சலுகைகள் எதிர்காலத்தில் மட்டுப்படுத்தப்படும் என்பதனையும் குறித்த திணைக்களம் கவனத்திற்கு கொண்டு வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.