உள்ளூர் ரின் மீன் உற்பத்தியை விருத்தி செய்ய நடவடிக்கை!
In இலங்கை November 19, 2020 4:59 am GMT 0 Comments 1372 by : Vithushagan

உள்ளூர் ரின் மீன் உற்பத்திகளை அதிகரிப்பதற்கு தேவையான பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று உறுதியளித்த அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் பந்துல குணவர்த்தன ஆகியோர் ரின் மீன்களுக்கான சில்லறை விலையை 200 ரூபாய் எனவும் நிர்ணயம் செய்துள்ளனர்.
உள்ளூர் ரின்மீன் உற்பத்;தியாளர்களுக்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றம் வர்த்;தக அமைச்சர் பந்துல குணவர்த்தன ஆகியோருக்கும் இடையில் நேற்று (புதன்கிழமை) வர்த்தக அமைச்சில் நடாத்தப்பட்ட கலந்துரையாடலினை தொடர்நதே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த சந்திப்பில் கருத்து தெரிவித்த உள்ளூர் ரின் மீன் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள், உள்ளூர் சந்தையில் இறக்குமதி செய்யப்பட்ட ரின் மீன்கள் தாராளமாக விற்பனை செய்யப்படுவதால் எதிர்காலத்தில் உள்ளூர் உற்பத்திகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து அமைச்சர்களுக்கு விளக்கமளித்தனர்.
இதன்போது கருத்துக்களைத் தெரிவித்த அமைச்சர்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வழிநடத்தலில் செயற்பட்டு வருகின்ற தற்போதைய அரசாங்கம், சுய பொருளாதாரத்தினை விருத்தி செய்வதில் முழுமையாக ஆர்வம் காட்டி வருகின்ற நிலையில், உள்ளூர் ரின் மீன் உற்பத்திகள் பாதிக்க அனுமதிக்கப்படமாட்டாது என்று தெரிவித்தனர்.
எனினும், தற்போதைய அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு உற்பத்தி செய்யப்படுகின்ற ரின் மீன்களை சதொச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்களின் ஊடாக சில்லரை விலை 200 ரூபாவிற்கு விற்பனை செய்வதற்கு வழங்குமாறு அமைச்சர்கள் விடுத்த கோரிக்கைக்கு ரின் மீன் உற்பத்தியாளர் சங்கம் முழுமையான இணக்கத்தை தெரிவித்தனர்.
இந்நிலையில், உடனடியாக தொலைபேசியில் சதொச நிறுவனத்தின் தலைவருடன் உரையாடிய அமைச்சர் பந்துல குணவர்த்ன, உள்ளூர் ரின் மீன் உற்பத்தியாளர்களின் முழுமையான உற்பத்திகளையும் 198 ரூபா வீதம் கொள்வனவு செய்து 200 ரூபா சில்லரை விலைக்கு இலங்கை முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்கள் ஊடாக விற்பனை செய்வதற்கு ஏற்பாடுகளை செய்யுமாறும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் எந்த ரின் மீனாக இருந்தாலும் அதனை 200 ரூபாவிற்கு மேல் விற்பனை செய்ய வேண்டாம் எனவும் அறிவுறுத்தல்களை வழங்கினார்.
கடந்த திங்கட் கிழமை மாளிகாவத்தையில் நடைபெற்ற அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்த உள்ளூர் ரின் மீன் உற்பத்தியாளர்களின் பிரதிநிதிகள், ரின்மீன்கள் இறக்குமதி செய்யப்படுவது உட்பட உள்ளூர் உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பாக தெளிவுபடுத்தினர்.
குறித்த விடயத்தினை அன்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பிரஸ்தாபித்த நிலையில், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் ஆலோசனைக்கு அமைய கடற்றொழில் அமைச்சர் மற்றும் வர்த்தக அமைச்சர் ஆகியயோர் இணைந்து இன்றைய கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.