ஊஞ்சல் சீலையில் சிக்குண்டு எட்டுவயது சிறுவன் உயிரிழப்பு: மட்டக்களப்பில் சோகம்
In இலங்கை January 24, 2021 4:12 am GMT 0 Comments 1710 by : Yuganthini

மட்டக்களப்பு- கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகிழடித்தீவு பகுதியில் எட்டு வயது சிறுவன் ஒருவர், ஊஞ்சல் சீலையில் சிக்குண்டு உயிரிழந்த சோக சம்பவம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றுள்ளது.
மகிழடித்தீவு- கட்டுப்பத்தை என்னும் பகுதியிலுள்ள மனோகரன் கேதீசன் என்னும் எட்டு வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பாடசாலை விடுமுறை நாளான நேற்று, வீட்டின் அருகிலுள்ள மாமரத்தில் தாயாரின் சாறியொன்றை ஊஞ்சல் அமைத்து விளையாடுவதற்கு முற்பட்ட வேளையில் சேலையில் சிக்குண்டு உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுவனின் தாயார், மாடுகளை மேய்ப்பதற்காக கொண்டுச் சென்று வீட்டுக்கு வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து சிறுவனை தேடியபோது, சீலையில் சிக்குண்ட நிலையில் இருந்தவரை மீட்டு மகிழடித்தீவு வைத்தியசாலைக்கு கொண்டுசென்றுள்ளனர்.
எனினும் குறித்த சிறுவன் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலையின் கடமை வைத்தியர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கொக்கட்டிச்சோலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததுடன் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைவாக திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார், சடலத்தினை பார்வையிட்டதுடன் மரண விசாரணையினை தொடர்ந்து பிரேத பரிசோதனைகளுக்கான உத்தரவினை பிறப்பித்தார்.
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டதுடன் மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.