ஊடகவியலாளர் கொலை: குற்றத்தை ஒப்புக்கொண்டார் இராணுவ சிப்பாய்!

ஸ்லோவாக்கியாவின் புலனாய்வு ஊடகவியலாளர் ஒருவரும் அவரது காதலியும் சுட்டுக்கொல்லப்பட்டமை குறித்து குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் இராணுவச் சிப்பாய், தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
27 வயதான ஜான் குசியாக் (Jan Kuciak) மற்றும் அவரது காதலி மார்டினா குஸ்னிரோவா ஆகியோர் கடந்த 2018ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஸ்லோவாக்கியாவில் பாரிய சர்சையை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட நால்வர் மீது கொலைக் குற்றச்சாட்டுக்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், மிரோஸ்லாவ் மார்செக் என்ற முன்னாள் இராணுவச் சிப்பாய் தற்போது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
ஜான் குசாக்கை கொலைசெய்ய உத்தரவிட்டமை குறித்து ஸ்லோவாக்கிய வர்த்தகர் ஒருவர் மீது பொலிஸார் குற்றச்சாட்டுக்களை பதிவுசெய்துள்ளனர்.
இத்தாலிய அரசியலில் காணப்படும் பாரிய ஊழல் மோசடி தொடர்பாக புலனாய்வு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே ஊடகவியலாளர் ஜான் குசாக் சுட்டுக் கொல்லப்பட்டார். கிழக்கு ஸ்லோவாக்கியாவின் வர்த்தகர்கள் மாஃபியாக்களுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், அவர்களுக்கு அரசியல் பின்புலம் காணப்பட்டதாகவும் ஜான் குசாக் தனது கட்டுரையில் சுட்டிக்காட்டியிருந்தார். பாதி நிறைவடைந்த நிலையில் காணப்பட்ட குறித்த கட்டுரை, அவரது மரணத்தின் பின்னர் பிரசுரிக்கப்பட்டது.
இதேவேளை, ஸ்லோவாக்கியாவின் வரலாற்றில் ஊடகவியலாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.