ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டது – தொடர்ந்தும் பலத்த பாதுகாப்பு
In இலங்கை April 25, 2019 1:30 am GMT 0 Comments 2273 by : Dhackshala
நாடு முழுவதும் நேற்று இரவு 10.00 மணிக்கு அமுலாக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 4.00 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது.
கடந்த 12 மணித்தியாலங்களில் எந்தவொரு அசம்பாவிதமும் நாட்டில் இடம்பெறவில்லை என இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தப்பத்து தெரிவித்துள்ளார்.
ஆதவன் செய்தி சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் வெள்ளவத்தை பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் குண்டு இருப்பதாக பொய்யான தகவல் வெளியானதென்றும் உண்மையில் மோட்டார் சைக்கிளை திறக்க முடியாமல் காணப்பட்டமையே அங்கு ஏற்பட்ட பிரச்சினை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
அதனை தவிர நேற்று இரவு வேளையில் எந்தவித அசாம்பாவிதங்களும் பதிவாகவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும் முப்படையைச் சேர்ந்த எண்ணாயிரத்து 500க்கும் மேற்பட்ட பாதுகாப்பு வீரர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அதில் ஆறாயிரத்து 300க்கும் அதிகமானோர் இராணுவத்தினர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவசரகால சட்டத்திற்கமைய இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் வீதி தடைகள் ஏற்படுத்தப்பட்டு சோதனை நடவடிக்கைகள் இடம்பெறுகின்றனவென்றும் சில நுணுக்கமான பாதுகாப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடர்ச்சியாக இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து, உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது.
அதனைத்தொடர்ந்து நாட்டில் ஏற்பட்ட அசாதாரன சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு அவசரக்காலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.