எகிப்து ஜனாதிபதியின் பதவியை நீடிக்கும் சட்டத்திருத்தம்: சிசி வாக்களித்தார்

எகிப்து ஜனாதிபதி அப்துல் ஃபட்டா அல்-சிசியை 2030ஆம் ஆண்டுவரை பதவியில் நீடிக்க வழிசெய்யும் சட்டத் திருத்தம் தொடர்பான வாக்களிப்பு இன்று (சனிக்கிழமை) இடம்பெற்று வருகின்றது.
குறித்த சட்டத்திருத்தத்திற்கு ஏற்கனவே நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. சட்டத்திருத்தம் குறித்து கருத்து கேட்கும் வாக்கெடுப்பை முப்பது நாட்களுக்குள் நடத்த வேண்டும். அதனடிப்படையில் இன்று இந்த வாக்கெடுப்பு இடம்பெறுகிறது.
குறிப்பாக தலைநகர் கைரோவிலுள்ள வாக்குச்சாவடியில் ஜனாதிபதி சிசி தனது வாக்கினை பதிவுசெய்தார்.
சிசியின் நான்காண்டு பதவிக்காலம் எதிர்வரும் 2022ஆம் ஆண்டு நிறைவடைகின்றது. இந்நிலையில், குறித்த பதவிக்காலத்தை ஆறு ஆண்டுகளாக நீடிப்பதற்கும் மூன்றாவது தடவையாக அவர் தேர்தலில் போட்டியிடவும் இந்த சட்டத்திருத்தம் அனுமதிக்கும். அத்தோடு, நீதித்துறையில் அதிக அதிகாரங்களை வழங்கவும் அரசியலில் இராணுவத்தின் தலையீட்டை நிறுத்தவும் வழியேற்படுத்தும்.
அத்தோடு, பாரிய அபிவிருத்தித் திட்டங்களை பூர்த்திசெய்யவும் பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும் சிசிக்கு இன்னும் அதிக காலத்தையும் அதிகாரத்தையும் வழங்குவது அவசியம் என அவரது ஆதரவாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஆனால், அதிகாரத்தை அதிகரிப்பது எதேச்சாதிகார ஆட்சிக்கு வழிவகுக்குமென விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 2014ஆம் ஆண்டு ஜனாதிபதியாக பதவியேற்ற சிசி, பின்னர் கடந்த வருடம் இடம்பெற்ற தேர்தலில் 97 வீதம் என்ற பெரும்பான்மை வாக்குடன் வெற்றிபெற்று இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.