எதியோப்பிய விமான விபத்து: விமானிகள் முறையான நடைமுறையை பின்பற்றியதாக பூர்வாங்க அறிக்கை
விபத்தை தவிர்ப்பதற்கு எதியோப்பிய எயர்லைன்ஸ் விமானிகள் முறையான நடைமுறைகளை பின்பற்றியிருந்ததாக, எதியோப்பிய போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எதியோப்பிய விமான விபத்து குறித்த முதலாவது உத்தியோகப்பூர்வ பூர்வாங்க அறிக்கை இன்று (வியாழக்கிழமை) வெளியானது.
குறித்த அறிக்கையில குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பாக தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
விமான தயாரிப்பாளர்களான போயிங்கினால் வழங்கப்பட்ட அனைத்து நடைமுறைகளையும் விமானிகள் முறையாக கையாண்டுள்ளனர். ஆனாலும் விமானத்தை கட்டுப்படுத்த முடியாது போயுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
விமானிகள் போயிங் மற்றும் ஒழுங்குறுத்துனர்கள் ஆகிய இரு தரப்பின் பரிந்துரைகளையும் செவிமடுத்து தவறான நடைமுறைகளை பின்பற்றியதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், விமானிகளின் நடவடிக்கையை நியாயப்படுத்தும் வகையில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
எனினும், விமான விபத்துகள் தொடர்பான சர்வதேச விதிகளுக்கு அமைய ஆரம்பகட்ட அறிக்கையில் எந்தவொரு தரப்பு மீதும் குற்றம் சாட்டப்படவில்லை.
விமான விபத்து குறித்த விரிவான ஆய்வு அறிக்கை தயாராக இன்னும் பல மாத காலங்களாகும் என தெரிவிக்கப்படுகிறது. அதன்படி இறுதி அறிக்கை ஓராண்டுக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதியோப்பியாவில் போயிங் 737 மக்ஸ் ரக விமானம் கடந்த மாதம் விபத்திற்குள்ளானதில் 157 பேர் பரிதாபகரமாக உயிரிழந்தனர்.
போயிங் ரக விமானம் கடந்த ஐந்து மாதங்களுக்குள் விபத்திற்குள்ளான இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும். இதற்கு முன்னர் கடந்த ஒக்டோபர் மாதம் இந்தோனேசியாவில் இடம்பெற்ற விமான விபத்தில் 189 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.