ஏன் இந்த துர்ப்பாக்கிய நிலை?
In சிறப்புக் கட்டுரைகள் March 12, 2019 8:17 pm GMT 0 Comments 7712 by : Arun Arokianathan
கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையில் இருந்து வெளியாகும் ஆங்கிலப் பத்திரிகையின் தலைப்புச் செய்தியைப் பார்த்தபோது அதிர்ச்சியாக இருந்தது. அதில் கிட்டத்தட்ட 6000 இலங்கைத் தமிழர்கள் தாய்லாந்து மலேசியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் நிர்க்கதிநிலையில் இருப்பதாகவும் தமக்கு அந்த நாடுகளில் அடைக்கலம் தரவேண்டும் அன்றேல் வேறெங்கேதும் அனுப்பிவைக்க வேண்டும் என அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் முகவர் அமைப்பிடம் வேண்டிநிற்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
சர்வதேச தமிழ் அகதிகள் வலையமைப்பின் அவுஸ்திரேலியாவைத் தளமாகக் கொண்ட சர்வதேச ஒருங்கிணைப்பாளர் அரச ரட்ணகாந்தன் அந்தப் பத்திரிகைக்கு தெரிவித்த தகவல்களுக்கு அமைவாக மலேசியாவிற்கு படகுகளில் சென்ற 4600 அடைக்கலம் கோரும் தமிழர்களின் விபரங்களையும் இந்தோனேசியாவில் 600 பேரின் விபரங்களையும் தாய்லாந்தில் 300 பேரின் விபரங்களையும் தாம் சேகரித்து வைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் இருந்து மக்கள் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்குப் புலம்பெயருதல் கடந்த முப்பத்தைந்து வருட காலத்துக்கு மேலாக முடிவின்றி இன்றும் தொடர்ந்து கொண்டே செல்கின்றது.
கடந்த 1983 ஜுலைக் கலவரம் நடந்து முடிந்ததில் இருந்து இலங்கையில் சட்டவிரோத புலம்பெயர்ந்தல் ஆரம்பமாகி விட்டது எனக் கூறுவதே மிகவும் பொருத்தம்.
இங்கிருந்து முதன்முதலில் வெளிநாடுகளுக்குப் புலம்பெயரத் தொடங்கியவர்கள் தமிழர்கள். இலங்கைத் தமிழர்கள் முதன்முதலில் தென்னிந்தியாவை நோக்கியே அகதிகளாகப் படையெடுத்தனர். வடபகுதிக் கடற்பரப்பினூடாக சாதாரண மீன்பிடிப் படகுகள் மூலம் ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாக பல்லாயிரக்கணக்கானோர் அக்காலத்தில் தமிழ்நாட்டை நோக்கி அகதிகளாக செல்லத் தொடங்கினர்.
‘தமிழர்கள் அச்சமின்றி நிம்மதியாக வாழ்வதற்கு இலங்கை பொருத்தமற்றதொரு நாடு’ என்ற செய்தியை 1983 ஜுலைக் கலவரம் தெட்டத் தெளிவாக உலகுக்கு வெளிப்படுத்திய போது, இலங்கைத் தமிழர்களுக்கு அதனை விட வேறு தெரிவுகள் எதுவுமே அப்போது இருக்கவில்லை. உயிரை மாத்திரம் காப்பாற்றிக் கொண்டாலே போதுமானது என்ற எண்ணம் மாத்திரமே அன்றைய காலத்தில் தமிழ் மக்களிடம் இருந்தது.
இலங்கைத் தமிழர்கள் மீது மிகவும் காட்டுமிராண்டித்தனமாக இனஒழிப்பு வன்முறையை ஜுலைக் கலவரத்தின் போது குண்டர்கள் கட்டவிழ்த்து விட்டதனால் இங்குள்ள தமிழர்களுக்கு அடைக்கலம் கொடுப்பதற்கு இந்தியா முழுமனதுடன் அன்று தயாராக இருந்தது. அதேசமயம் ‘தொப்புள்கொடி உறவு’ என்ற வகையிலும், இனப்பற்று காரணமாகவும் தமிழ்நாட்டு மக்கள் அன்புக்கரம் நீட்டி, அடைக்கலம் அளித்ததையெல்லாம் என்றுமே மறந்து விட முடியாது.
முதன்முதலில் தமிழ்நாட்டை நோக்கி ஆரம்பமான புலம்பெயர் படலம் படிப்படியாக மேற்குலகம் நோக்கி பரவத் தொடங்கியது. 1983 ஜுலைக் கரவலத்தின் போது, தென்னிலங்கையில் மிக மோசமான துன்புறுத்தல்களுக்கு உள்ளாகிய தமிழர்களில் படித்த மக்களினதும், மேட்டுக்குடி வர்க்கத்தினரதும் பார்வை மேற்குலத்தின் மீதே விழுந்தது.
ஐரோப்பா மற்றும் அமெரிக்கக் கண்டங்களிலுள்ள ஏதேனுமொரு நாட்டுக்கு குடிபெயர்ந்து செல்வதன் மூலம் அந்நாட்டில் பாதுகாப்பாகவும், கௌரவமாகவும் வாழ முடியுமென அவர்கள் எதிர்பார்த்ததில் தவறேதும் இல்லை.
தமிழர்கள் என்ற ஒரேயொரு காரணத்துக்காக வன்முறைக் கும்பல்களின் கொலைவெறித் தாக்குதல்களுக்கும், இனரீதியான வன்முறைக் கட்டவிழ்ப்புக்கும் நாள்தோறும் அஞ்சி வாழ்வதை விட கண்காணாத தேசமொன்றுக்குச் சென்று உயிராபத்தின்றி வாழ்வதே மேலென்று தமிழர்கள் அவ்வேளையில் எண்ணினர்.
அக்காலத்தில் தமிழர்களின் அசைக்க முடியாத சொத்தாக கல்வி விளங்கியது. அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி பதவிகளைக் கைப்பற்றிக் கொள்கின்ற குறுக்குவழிகளை நாட வேண்டிய அவசியம் தமிழர்களுக்கு என்றுமே இருந்ததில்லை. கல்விப் புலமையினாலும், சுயதிறமையினாலும் இலக்குகளை எட்டிப் பிடிக்கக் கூடிய வல்லமையுடையவர்களாக இருந்த தமிழர்கள், தாங்கள் காலூன்றிய புலம்பெயர் நாடுகளில் தங்களது திறமைகளால் வாழ்வை வளம்படுத்திக் கொண்டனர்.
அதேசமயம், புலம்பெயர் நாடுகளும் இலங்கைத் தமிழர்களை ‘விசுவாசம் நிறைந்த கடின உழைப்பாளிகள்’ என்ற முத்திரையுடன் அரவணைக்கத் தொடங்கியது. தாங்கள் புலம்பெயர்ந்து வாழ்கின்ற தேசத்தின் கலாசார பண்பாடுகளையும், அங்குள்ள மக்களின் பாரம்பரியங்களையும் உள்வாங்கியபடி தோழமையுடன் வாழத் தலைப்பட்ட தமிழர்களை புலம்பெயர் தேசங்கள் ஒருபோதுமே வெறுப்புடன் நோக்கியதில்லை.
இலங்கைத் தமிழர்கள் இன, மத கலாசார ரீதியில் நெகிழ்வுப் போக்குடையவர்களாக விளங்கியதனால் புலம்பெயர் தேசங்களில் எல்லாம் அவர்களால் உயர் பதவிகளை அலங்கரிக்கக் கூடியதாக இருந்தது. இதன் காரணமாக இலங்கைத் தமிழர்களின் மேற்குலக புலம்பெயர்வு மேலும் தீவிரமடைந்தது.
இலங்கையில் காலப் போக்கில் யுத்தம் தீவிர நிலைமைக்கு வரத் தொடங்கியதையடுத்து இங்குள்ள பெரும் கல்விமான்களும் கூட வகைதொகையின்றி மேற்குலக நாடுகளுக்கு புலம்பெயர ஆரம்பித்தனர். இலங்கையில் இருந்து மக்கள் புலம்பெயர்வதென்பது இன்னும்தான் முடிவுக்கு வந்தபாடாக இல்லை.
யுத்தம் நிறைவடைந்து எதிர்வரும் மே மாதத்துடன் 10 வருடங்கள் ஆம் ஒரு தசாப்தம் பூர்த்தியாகவுள்ள போதிலும் இன்னமும் தமிழர்கள் புலம்பெயரும் துர்ப்பாக்கிய நிலை காணப்படுவதை மறுக்க முடியாது.
இதற்கு முக்கிய காரணம் தமிழர்களுக்கு நம்பிக்கை தரும் அரசியல் தீர்வோ அதற்கு வழிகோலக்கூடிய உறுதிமிக்க புதிய அரசியல்யாப்போ நிறைவேற்றப்படாமையே ஆகும். தமிழ்த் தேசியக் கூட்ட்மைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நேற்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் ஆற்றிய காத்திரமான உரையில் அரசியல் தீர்வு இன்றேல் இந்த நாட்டிற்கு பொருளாதார சுபீட்சமோ எதிர்காலமோ கிடையாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.
இந்த நிச்சயமற்ற சூழலினால் இங்கிருந்து மக்கள் சட்டபூர்வமாகவோ அன்றேல் சட்டவிரோதமாகவோ புலம் பெயர்ந்து செல்வதை தடுத்து நிறுத்துவது கடினமாகும். எனவே நாட்டின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.