ஐந்தாவது கட்ட நிவாரண நிதி தொகுப்பாக 315 மில்லியன் திர்ஹாம்: டுபாய் இளவரசர் அறிவிப்பு!

டுபாயில் ஐந்தாவது கட்ட நிவாரண நிதி தொகுப்பாக 315 மில்லியன் திர்ஹாம் தொகையினை, பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் அறிவித்துள்ளார்.
கடந்த ஆண்டில் கொரோனா பாதிப்பால் வர்த்தகங்கள், தொழில் துறைகளில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை சமாளிக்க இந்த தொகை செலவிடப்படவுள்ளது.
முதற் கட்டமாக கடந்த மார்ச் மாதம் 12ஆம திகதி 150 கோடி திர்ஹாம் அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இரண்டாவது கட்டமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 29ஆம திகதி 330 கோடி திர்ஹாமும், மூன்றாவதாக கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் திகதி 150 கோடி திர்ஹாமும், நான்காவதாக கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 50 கோடி திர்ஹாமும் நிவாரண நிதி தொகுப்பு அளிக்கப்பட்டு இருந்தது.
தற்போது ஐந்தாவது கட்ட நிவாரண நிதி தொகுப்பும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதில் விலக்குகள் மற்றும் சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறை மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் துறைகள் பொறுத்தவரையில் கண்காட்சிகள், மாநாடுகள், விளையாட்டு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட அனைத்து பொது நிகழ்ச்சிகளுக்கும் ஒத்திவைப்பு மற்றும் நிகழ்ச்சியை இரத்து செய்வதற்கான கட்டணங்களில் இருந்து தொடர்ந்து விலக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சலுகை தொடர்ந்து நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை அளிக்கப்பட்ட 5 பொருளாதார நிவாரண நிதி தொகுப்புகளின் மதிப்பு 710 கோடி திர்ஹாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிவாரண நிதி தொகுப்பானது இந்த ஜனவரி மாதம் முதல் வரும் ஜூன் மாதம் வரை அளிக்கப்படும். இதுவரை டுபாயில் மொத்தம் 710 கோடி திர்ஹாம் நிவாரண நிதி தொகுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.